மனித உரிமை மீறல்களுக்கு தீர்வுகாண கால அவகாசம் அவசியம்: தேசிய சமாதானப் பேரவை

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வுகாண்பதற்கு கால அவகாசம் அவசியம் என தேசிய சமாதானப் பேரவை குறிப்பிட்டுள்ளது.

தேசிய சமாதானப் பேரவை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுமாயின் அது நல்லாட்சிக்கான வழிகோலாக அமையும்.

வழங்கப்படும் கால அவகாசமானது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னகர்த்திச் செல்வதற்கும் உதவும்.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவுகளை ஆராய்ந்து பார்ப்பதற்கும் இக்கால அவகாசமானது துணைபுரியும்” எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.