மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவியைத் துறந்தார் அம்பிகா!

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மேலும் தனது இராஜினாமா தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படுமென ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டுவரை கொழும்பிலுள்ள ஐ.நா.மனித உரிமைகளுக்கான தூதுவரின் அலுவலகத்தில் சட்ட ஆலோசகராகக் கடமையாற்றிய அவர், கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆணையாளர்கள் மூவரில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

அவருக்கான நியமனத்தை அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையுடன் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

அந்தவகையில் ஐ.நா.மனித உரிமைகளுக்கான தூதுவர், மனித உரிமைகளுக்கான மூத்த ஆலோசகர் அலுவலகத்தில் சட்ட ஆலோசகர், சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஆளுநர் சபையின் உறுப்பினர், சர்வதேச பெண்ணிய அமைப்பான அவசர செயற்பாட்டு நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான உப.தலைவர், பால்நிலை ஒருங்கமைப்பும் மற்றும் மதிப்பீடு என்ற விடயத்துக்கான ஐ.நாவின் வதிவிட இணைப்பாளர் ஆகிய பதவிகளில் அம்பிகா சற்குணநாதன் பணியாற்றியுள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டத்திட்டங்கள் தொடர்பாக போதிய அனுபவமிக்கவர்கள் இலங்கையின் நீதித்துறையில் இல்லை. சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதன் ஊடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியுமென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.