மனம் விட்டுப் பேசுவோம் – சம்பந்தன் அழைப்பு

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய காணி மற்றும் நிதி அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த விடயம் பாரியதொரு பிரச்சினை இல்லை. சம்பந்தப்பட்ட சகலரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில் சில பிரதேச செயலகப் பிரிவுகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பில் பிரதமர், அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அனைரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றுக்கு வரமுடியும்.

குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்துக்கு அமைய நாட்டில் 25 மாவட்டங்களும், 331 பிரதேச செயலகப் பிரிவுகளும், 4,001 கிராம சேவகர் பிரிவுகளும் காணப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவில் 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டள்ளது. துரதிஷ்டவசமாக இங்கு நீண்டகாலமாகப் பிரச்சினை தொடர்கிறது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் காணி அதிகாரம், நிதி அதிகாரம் வழங்கப்படவில்லை. நாம் ஒன்றாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானத்துக்கு வர முடியும். இதுவிடயம் தொடர்பில் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காணி அதிகாரங்கள் மற்றும் நிதி அதிகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

திருகோணமலையில் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை பாரிய பிரச்சினைகள் இல்லையென்பதுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பை ஏற்படாத வகையில் தீர்வினைக் காணமுடியும். எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட செயலாளரை இவ்வருட இறுதிவரை சேவையில் பணியாற்றுவதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.