மத்திய வங்கி விவகாரத்தில் பிரதமர் பொறுப்பு கூற வேண்டும்- மரிக்கார்

மத்திய வங்கியின் செயற்பாடுகள் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழேயே இடம்பெறுகின்றன. எனவே தற்போது ஏற்படுள்ள சிக்கல்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கடமை அவருக்கும் இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மத்திய வங்கி அதிகாரிகளின் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமென்றால் அதற்கு பொறுப்பான அமைச்சரும் பொறுப்புக் கூற வேண்டுமென அண்மையில் ஜனாதிபதி கூறி இருந்தார்.

எனவே இந்தக் குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி நிதியமைச்சர் மீதும் சுமத்த வேண்டும். காரணம் மத்திய அமைச்சின் செயற்பாடுகள், நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழேயே முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் தேர்தல் நடவடிக்கைகளை பின்னணியாக கொண்டு இந்தக் குற்றச்சாட்டை ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்றால் அதாவது உண்மையாகவே அவர் அதிகாரிகளை குறை கண்டிருந்தால் அந்தக் குற்றச்சாட்டை நிதியமைச்சர் மீதும் முன்வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் நாட்டில் ஜனாதிபதியாக 10 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவும் ஐந்தாண்டுகள் அதிகாரத்தில் இருந்த மைத்திரிபால சிறிசேனவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்

இவர்கள் நாடாளுடன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக மற்றும் ஜனாதிபதிகளாக இருந்த சந்தர்ப்பங்களில் கட்டியெழுப்ப முடியாது போன நாட்டை கட்டியெழுப்புவதற்காக மீண்டும் தேர்தலில் நிற்கின்றனர். இது ஒரு வேடிக்கையான விடயமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.