மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளில் போட்டியிடும் மட்டக்களப்பு வேட்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு – கல்லடியில் அமைந்துள்ள ‘வொய்ஸ் ஒவ் மீடியா’ ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுக்களான நிலையத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும், கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட, மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இதுவரையும் நீதி கிடைக்காதிருப்பது பற்றியும், கலந்துரையாடப்பட்டன.

இதுவரை காலமும் ஊடகவியாலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும், அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தாம், தமது வெற்றியின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு உரிய நலநோம்புத் திட்டங்கள், அநீதிக்கு எதிரான நீதி விசாரணைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் முன்னின்று செயற்படவுள்ளதாக இதன்போது வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் வேட்பாளர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கி.துரைராஜசிங்கம், ஞா.சிறிநேசன், கோ.கருணாகரம் (ஜனா), ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.எஸ்.எஸ்.அமீரலி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அருண் தம்பிமுத்து, திருமதி.சந்திரகாந்தா மகேந்திரநாதன், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பஷீர் சேவுதாவுத், மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த பிரெடி கமகே, மீபுர, கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.