மங்களவின் கருத்தால் ஆடிப்போன சிங்கள பௌத்த மக்கள்!

ஸ்ரீலங்காவில் பெரும்பான்மையினமாக பௌத்த மக்கள் இருந்தாலும் இதனை பௌத்த நாடு என்று அழைக்க முடியாது என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் அடித்துக் கூறிய நிலையில், அவரது இந்த அறிவிப்பிற்கு எதிராக மீண்டும் எதிர்ப்பலைகள் எழும்பியுள்ளன.

அமைச்சர் மங்கள சமரவீர புத்தபெருமானையும், பிக்குமார்களையும் இழிவுபடுத்தும் பேச்சுக்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க, நாட்டிற்குள் மீண்டுமொரு கலவரத்தையே அவர் ஏற்படுத்த முயற்சி செய்துவருவதாகவும் சாடினார்.

மாத்தறையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா நாடானது ஒரு பௌத்த நாடே கிடையாது என்றும், ஸ்ரீலங்காவில் வாழும் அனைத்து பிரஜைகளினுடையது நாடே இது எனவும் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சரின் இந்தக் கூற்றுகளுக்கு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த – கோட்டா விசுவாசிகளான கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிங்கள பௌத்த தலைமை பீடங்கள் உட்பட தலைமை பௌத்த பிக்குகளும், தென்னிலங்கையிலுள்ள சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களும் கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருந்தன.

இந்த நிலையிலேயே நேற்று கூடிய ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த அமைச்சர் மங்கள சமரவீர, இதுவொரு பௌத்த நாடே கிடையாது என்று அடித்துக்கூறியிருக்கின்றார்.

அமைச்சரின் இந்தக் கருத்திற்கு கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடுமையான எதிர்ப்பினை சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க வெளியிட்டிருக்கின்றார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர தொடர்ந்தும் இந்த நாட்டிலுள்ள பிக்குமார்களையும் மகாநாயக்க தேரர்களையும் அவமதிக்கின்ற வகையில் இந்த நாடு சிங்கள பௌத்த நாடு இல்லை என்று தொடர்ச்சியாக கூறிவருகின்றார்.

இந்த நாட்டில் எந்தவொரு வேற்றுமதத்தினர் கூறாத ஒரு விடயத்தையே கூறிவருகின்றார். மங்கள சமரவீரவின் பௌத்த மதத்தை பின்பற்றுகின்ற நிலை குறித்து விளக்கமளிக்கும் ஒரு புகைப்படத்தை தற்போது காண்பிக்கின்றேன்.

இதுதான் மங்கள சமரவீர. இந்த புகைப்படத்தில், புத்தர் சிலை ஒன்றை அதன் தலைப்பகுதியை நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது கையினால் எடுத்துக்கொண்டபோது எடுக்கப்பட்டதாகும். பௌத்த பூமிக்கு இவ்வாறான அவமதிப்புக்களை ஏற்படுத்திவருகின்றார் மங்கள சமரவீர.

புத்தப்பெருமானின் சிலையின் தலைப்பகுதியைப் பிடித்துத் தூக்குகின்ற ஒரு பௌத்த நபரை எங்காவது கண்டிருக்கின்றீர்களா?

அதனால் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடமுள்ள பௌத்த மதத்திற்கு எதிரான செயல் இந்தப் புகைப்படத்தின் ஊடாக புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நாடானது பௌத்த நாடல்ல என்று கூறி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தவே முனைகின்றார்”