மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்கள் தொடர்பில் அவதானம் தேவை: சிறிநேசன்

மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்த நினைப்பவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

கரவெட்டி எம்.ஜி.ஆர். நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கரவெட்டி பத்திரகாளியம்மன் ஆலய முன்றியில் இந்த நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன், நீலிக்கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் கவனமாக இருக்காவிட்டால் மக்கள் ஏமாறும் நிலையே ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். நற்பணி மன்றத்தின் தலைவர் வி.கங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயக் கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம், மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது எம்.ஜி.ஆர். நற்பணி மன்றத்தின் தலைவர் வி.கங்காதரன் எம்.ஜி.ஆர்.போன்று வேடம்தரித்து நிகழ்வினை நடத்தியதுடன், எம்.ஜி.ஆர்.இன் 102வது பிறந்த தினத்தினை குறிக்கும் வகையில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில் ஐந்தாம்தரம், சாதாரண தரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.