மக்களின் காணிகளை கையகப்படுத்த அரச அதிகாரிகள் முயற்சி – சிவமோகன்

மக்களின் காணிகளை அரச அதிகாரிகள் கையகப்படுத்த முயல்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அரச அதிகாரிகள் மக்களின் காணிகளை தவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “மக்களின் காணிகளை அரச அதிகாரிகள் கையகப்படுத்த முயலும் செயற்பாடுகள் பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக வவுனியாவில் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. மக்கள் தமது காணி உறுதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் சமயத்தில் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

அரச அதிகாரிகள் சரியான நடைமுறையினை கடைப்பிடித்தால் இவ்வாறான காணி பிரச்சினைகள் ஏற்படாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.