மகிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரி அரச நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது

அரசாங்க நிதியை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய காமினி சேனாரத் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2012ஆம் ஆண்டு, கொள்ளுப்பிட்டியில் விடுதி ஒன்றை அமைக்க 18.5 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, அந்த நிதியில் 4 பில்லியன் ரூபாவை அம்பாந்தோட்டையில் விடுதி ஒன்றை அமைப்பதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகிந்த ராஜபக்சவின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி சேனாரத், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் பியதாச குடபலகே, முன்னாள் சமுர்த்தி ஆணையாளர் நீல் பண்டார கப்புவின்ன ஆகியோர், நேற்று கோட்டே நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

இதன்போதே இவர்களை எதிர்வரும் 15ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY