மகாவலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் தமிழர்களின் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு- பிரதமரின் கூற்றை மறுக்கிறார் ரவிகரன்

மகாவலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களுடைய பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தரவுகளைக் கொண்டு சுட்டிக்காட்டியுள்ளார்.

மகாவலி ‘எல்’ வலயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக முல்லைத்தீவு கள்ளப்பாட்டுப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் மகாவலி ‘எல்’ காணிகள் சம்பந்தமான கேள்விக்கு, பிரதமர் பதிலளித்த விதம் வேடிக்கையாக இருக்கின்றது.

நிச்சயமாக 1984ஆம் ஆண்டு எமது மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மீளக் குடியமர்ந்த போது அவர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக பாதுகாக்கப்பட்டிருந்த நிலங்கள் அவ்வளவும் அபகரிக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக அந்தக் காணிகள் தொடர்பான புள்ளி விபரங்கள் இருக்கின்றன. மொத்தமாக 3,744 ஏக்கர் காணிகள் அங்கு பறிக்கப்பட்டன. பிரதமர் தன்னுடைய உரையில் 408 ஏக்கர் காணி, அதுவும் 103 பேர் பயிர் செய்ததாகவும் சிங்கள மக்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படவில்லை என்றும் கூறினார். ஆனால் பின்னர் பகிர்ந்தளிக்கப்பட்டது போன்றும் கருத்துக் கூறினார்.

இவ்வாறிருக்க, நெலும்வெவ (உந்திராயன் குளம்) 264 ஏக்கர், ஆமையன்குளம் 360 ஏக்கர், அடையக்கறுத்தான் குளம் 75 ஏக்கர், சாம்பல்குள வயல் 300 ஏக்கர் என 899 ஏக்கர் நிலம் குளத்தோடு சம்பந்தப்பட்ட வயல்களாகும்.

இதில் 360 ஏக்கர் கொண்ட ஆமையன்குளத்தை 103 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நிதியில் புனரமைப்புச் செய்து முன்னைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென அந்தக் குளத்தை கிரிவன்வெவ என்று பெயர் மாற்றம் செய்து சிங்கள மக்களிடம் கையளித்தமை யாவரும் அறிந்ததே.

இந்தக் குளத்தோடு உள்ள 360 ஏக்கர் குளத்தைத் தான் எமது மக்கள் விவசாயம் செய்துவந்த நிலையில், 900 ஏக்கர் நிலம் வரை காடுகளை அழித்தும் வேறு வளங்களை எடுத்தும் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 3,744 ஏக்கர் காணியுடன் விஸ்தரிக்கப்பட்டு 11 ஆயிரத்து 232 ஏக்கர் காணிகள் மகாவலி ‘எல்’ என்ற பெயரில் அபகரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

எனவே, பிரதமர் கூறிய கூற்றுப் பொய் என்பதை இப்போது சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குறித்த தமிழர்களின் காணிகள் யார் யாருக்கு எத்தனை ஏக்கர் என்பதும் யார் யார் வாரிசாக இருக்கின்றார்கள் என்ற சகல தரவுகளும் எங்களிடம் உள்ளது. இந்நிலையில் இவ்வாறு காணகளை அபகரிப்புச் செய்வதை விடுத்து தமிழர்களுடைய காணிகளை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான்எமது கோரிக்கை” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட மகாவலி ‘எல்’ வலய வர்த்தமானி அறிவித்தல் குறித்து கேள்வி எழுப்பினார்.

“குறிப்பாக மகாவலி ‘எல்’ வலயத்தில் உள்ள தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு அவை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காணிகளை பிரதேச செயலகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இது குறித்து பிரதமர் கவனம் செலுத்தி தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், “முல்லைத்தீவு மாவட்ட மகாவலி ‘எல்’ வலயத்தில் தமிழ் மக்களின் எந்தவொரு காணியும் சிங்கள மக்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றும் மகாவலி ‘எல்’ வலயத்தில் நீர்வழங்கல் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட நிலங்களுக்கு மாற்றீடான நிலங்கள் உரிய தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் இது குறித்து கலந்துரையாடத் தயாராக இருப்பதாகவுக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.