மகாநாயக்க தேரர்களின் அறிவுரையை ரணில் அரசு பின்பற்ற வேண்டும் – தினேஸ் கோரிக்கை

புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்ற மகாநாயக்க தேரர்களின் அறிவுரையை கேட்டு நடக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கோரிக்கைவிடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கையினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

மகாநாயக்கர்களின் கோரிக்கையினையும் மீறி புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிவரும் நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய சூழலில் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்ற மகாநாயக்க தேரர்களின், அறிவுரையை ரணில் அரசு கேட்க வேண்டும் என்றும், அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் இரத்த ஆறு ஓடக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மஹிந்த அரசு முடிவு கட்டியது. எனினும், புலம்பெயர் தேசங்களில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் பயங்கரவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளில் சம்பந்தன் தலைமையிலான குழுவினரும், ரணில் தரப்பினரும் ஈடுபட்டுள்ளதாகவும், புதிய அரசமைப்பினுாடாக இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.