மகாசங்கத்தின் ஆசீர்வாதமின்றி புதிய அரசியலமைப்பில்லை! – அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

மகாசங்கத்தினரின் ஆசீர்வாதமின்றி அரசியலமைப்பை முன்வைக்க வேண்டாம் என அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தேவைப்பட்டால் மகாசங்கத்தினரை உள்ளடக்கிய அரசியலமைப்பு தயாரிப்பு குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

பௌத்த சாசன பணிக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், புதிய அரசியலமைப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவது தொடர்பான பிரிவில் மாற்றங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை திரும்பப் பெறுவதற்கான நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை பாதிக்கும் வகையிலான எந்தவொரு திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது என அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்திருந்த போதிலும், வழிகாட்டால் குழுவின் இடைக்கால அறிக்கை அதற்கு முரணானதாக விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.