பௌத்தர்களின் வழிகாட்டுதலிலேயே சிறுபான்மையினர் வாழவேண்டும்-பேராயர்!

ஐ.எஸ் தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலமைகள் காரணமாக தமிழ் – முஸ்லீம் மக்கள் அச்சத்திற்கும், பீதிக்கும் ஆளாகியுள்ள நிலையில், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையினமான பௌத்தர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய வாழ வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அறிவுறுத்தியுள்ளார்.

சிங்கள பௌத்த கடும்போக்குவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இந்தக் கோரிக்கையை கர்தினால் முன்வைத்திருக்கின்றார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து ஐ.எஸ். ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தேச பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பிலான ஐந்து அம்ச செயற்திட்டம் அடங்கிய நூலொன்று நேற்றைய தினம் கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டது.

ஜாதிக்க ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலைமையிலான இலங்கை தேசிய சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து அம்ச செயற்திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித், அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் உள்ளிட்ட தலைமை பௌத்த பிக்குகள், முஸ்லிம் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித், சிறிலங்காவின் கலாசாரம் பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருப்பதால், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய சமூகங்கள் வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் கலாசாரம் பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை ஏனைய மதத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். ஏனையவர்களுக்கான வாய்ப்புகளை நாம் வரவேற்கின்றோம். அதனை நாம் சகோதரத்துவத்துடனான குடும்பத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே இந்த நாட்டின் குடும்பம். இந்த குடும்பத்தில் மூத்த சகோதரர் பௌத்தம்.

அவரது வழிகாட்டல்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது எமக்கு எந்தவொரு பாதிப்பையும், நட்டத்தையும் ஏற்படுத்தாது. குடும்பத்தில் மூத்த சகோதரரின் வழிகாட்டலை பின்பற்றுவது தவறான விடயமல்ல. அது நல்ல விடயமே. அதுபோல், மூத்த சகோதரர் சிறியவர்களை மதிக்க வேண்டும். அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த உரையின் போது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளே பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை தயாரித்து அவற்றை விற்பதற்காக உலக நாடுகளில் யுத்தங்களையும், மோதல்களையும் கட்டவிழ்த்து விடுவதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியதுடன் அந்த குற்றச்சாட்டிற்கான ஆதாரமாக பல விடையங்களையும் முன்வைத்தார்.

இதற்கமையவே ஏப்ரல் 21 ஆம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து தொடர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ் என்ற இஸ்லாமிய தேச ஆயுதக்குழுவினரையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமே உருவாக்கியிருப்பதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டினார்.

அதனால் மேற்குலக நாடுகள்தமது தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்காக ஐ.எஸ் போன்ற அனைத்து தீவிரவாதக் குழுக்களையும் உருவாக்கி அவற்றை இயக்கிவரும் நிலையில், சிறிலங்காவில் வாழும் மக்கள் அந்த சதித்திட்டங்களின் உண்மைத்தன்மையை புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு துணை போய்விடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

அத்துடன் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் மேற்குலக நாடுகளின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது என்பது எனது கருத்து. இதற்கு இஸ்லாமிய மக்களை தொடர்புபடுத்துவது பிழையான விடயமாகும். இஸ்லாமிய மதத்திற்குள் அதற்கு இடமில்லை. குர்-ஆனிற்குள் இவ்வாறு சர்ச்சைக்குரிய 26 பிரிவுகள் உண்டு. அதனைவிட வேறு எதுவும் இல்லை.

சகோதரத்துவத்தைவும், சமாதானத்தையும் வலியுறுத்துவதே இஸ்லாமிய சமயம். இது இஸ்லாமிய பிரச்சினையல்ல, இது வேறுவொரு செயற்றிட்டம். பிரிவினைவாதத்தை தோற்றுவித்து, அமைப்புகள் உருவாவதற்கு வாய்ப்பளித்து, அதன் மூலம் ஆயுதங்களை உற்பத்தி செய்து தமது பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்துகொள்கின்றார்கள். இஸ்லாமியர்கள் மிகப்பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

அவர்களை தீவிரவாதிகள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கக்கூடாது. இதிலிருந்து மீள வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். இதன் பின்னணியில் மிகப்பெரிய சூழ்ச்சி ஒன்று காணப்படுகின்றது. மதங்களுக்கு இடையில், இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தி, முழு உலகையும் ஆள்வதற்கான செயற்றிட்டமே இது.

லிபியா மிக அழகாகக் காணப்பட்ட நாடு, இன்று என்ன நடந்துள்ளது. அழிவின் விழிம்பில் இருக்கின்றது. அதுவே உண்மை. இது முஸ்லிம்களின் செயற்பாடுகள் அல்ல. அவர்களில் ஒரு சிலர் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். எனினும் அதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்” என தெிரிவித்தார்.

சிறிலங்காவில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்திற்கும் மேற்குலக நாடுகளே பிரதான காரணம் என்றும் சுட்டிக்காட்டிய கர்தினால் ரஞ்சித், அதனை புரிந்துகொள்ளாமலேயே தமிழ் – சிங்கள மக்கள் மோதிக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையில் இரு இனங்களுக்கு இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது. பல தசாப்தங்களாக ஒன்றாக வாழ்ந்த மக்கள் மோதிக்கொண்டனர். இதற்கு மேற்குலகே காரணம். இஸ்ரேலில், மொசாட் என்ற அமைப்பு எமது இராணுவத்திற்கு பயிற்சியளித்தது. அதே அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் பயிற்சியளித்தது.

அவர்கள் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என அவர்களே பயிற்சியளித்தார்கள். எமது முட்டாள்தனமான சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மோதிக்கொண்டார்கள். அவர்களிடமே ஆயுதங்களையும் கொள்வனவு செய்துகொண்டோம். உலக வங்கியும் அவர்களின் ஒரு நிறுவனமே. இந்த செயற்திட்டத்திற்குள் நாங்கள் அவர்களிடம் யாசகம் கேட்பவர்களாக மாறிப்போகின்றோம்” எனவும் தெரிவித்தார்.