போர் பதற்றத்துக்கு இடையே வடகொரியாவுக்கு ஐ.நா. உயர் அதிகாரி விரைந்தார்

அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ஏவுகணை ஒன்றை வடகொரியா கடந்த 29-ந் தேதி ஏவி சோதித்தது. அத்துடன் தன்னைத்தானே அணு ஆயுத நாடாக அறிவித்துக்கொண்டது.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவும், தென் கொரியாவும் இதுவரை இல்லாத அளவில் 230 போர் விமானங்களுடன் கூடிய கூட்டு போர் பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கி உள்ளன. இந்த சூழ்நிலையில் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

இதற்கிடையே ஐ.நா. சபையின் உயர் அதிகாரி பெல்ட்மேன் வடகொரியாவுக்கு நேற்று விரைந்துள்ளார். அவர் வரும் வெள்ளிக்கிழமை வரை அங்கு இருப்பார். கடந்த 6 ஆண்டுகளில் ஐ.நா. சபையின் உயர் அதிகாரி ஒருவர் வடகொரியா பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.

இது தொடர்பாக ஐ.நா. சபையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் நிருபர்களிடம் பேசுகையில், “வடகொரியாவின் வெளியுறவு மந்திரி ரி யோங் ஹோ உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பெல்ட்மேன் சந்தித்து பேசுவார். கொள்கை ரீதியிலான விஷயங்கள் இந்த பேச்சு வார்த்தையில் இடம்பெறும். அதே நேரத்தில் அவர் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசும் திட்டம் ஏதும் இல்லை” என்று கூறினார். கடந்த செப்டம்பர் மாதம் கொள்கை ரீதியிலான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஐ.நா. சபைக்கு வடகொரியா அழைப்பு விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY