போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை உறுதிப்படுத்தவேண்டும்!

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பகத்தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச விசாரணையாளர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவேண்டுமென கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 8ஆம் ஆண்டு நினைவுநாளை நினைவுகூர்ந்து வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் இறுதிப் போரின் எட்டாவது வருட நிறைவை நாம் இன்று நினைவு கூறுகின்றோம்.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்ற அதேவேளையில், கடந்த 26 வருட யுத்தத்தில் இழந்த உயிர்களின் கெளரவத்தை வலியுறுத்தி அவர்களை நினைவுகொள்வோம்.

எமக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சியையும், இழப்புக்களையும் நினைவுகூரும் இந்த வேளையில், நாம் போரின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் போர் வடுக்களை ஆற்றுவதற்கு உதவுவதுடன், முரண்பாடுகளை நீக்கி நீண்டகால சமாதானத்தை நாட்டிலே உருவாக்குவதற்காக தொடர்ந்தும் உழைக்க வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையையும், நம்பகத்தன்மையும் வழங்கக்கூடிய பொறுப்புக்கூறும் செயல்முறை ஒன்றை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றேன்.

இதற்கு ஏதுவாக சர்வதேச, பொதுநலவாய நாடுகளின் விசாரணையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசு தனது சர்வதேச கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்.

கனேடியத் தமிழர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதுடன், எமது கூட்டாட்சியின் 150 வது வருடத்தை நிறைவு செய்கின்ற வேளையில், தமது துயரங்களைத் தாண்டி கனேடியத் தேசத்தின் வளர்ச்சிக்குத் தமிழ் கனேடியர்கள் வழங்கிய பங்களிப்புகளை நாம் அங்கீகரிக்கின்றோம் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY