போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேசத்தின் தலையீடு குறித்து இலங்கை அரசாங்கம் மீண்டும் சூளுரை!

போர்க் குற்ற விவகாரத்தில் சர்வதேச நீதிபதிகளை ஸ்ரீலங்காவிற்கு அழைத்து வருவது குறித்து எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எந்தவொரு படையினரையோ அல்லது எந்தவொரு நபரையோ போர்க் குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் முன்பாக கொண்டுசெல்ல இடமளிக்கப் போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனைகளை அமுல்படுத்துவதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடித்து கேட்பதற்கான யோசனை ஒன்றை முன்வைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் முற்பகல் 9.30 அளவில் கூடிய ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது சபையில் எழுந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவினால் கொண்டுவரப்படவுள்ள யோசனை குறித்து கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக ஸ்ரீலங்கா நீதிமன்றக் கட்டமைப்பு மீது நம்பிக்கை இருக்கின்றதா என்றும் அவர் வினவினார். இதற்கு பதிலளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, சர்வதேச நீதிபதிகளை ஸ்ரீலங்காவிற்குள் அனுமதிப்பது குறித்து அரசினால் எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார். கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி அரசாங்கத்தை சிலர் கொள்ளையிட்டதாகவும், அதனூடாக நீதிமன்றக் கட்டமைப்பையும் அப்போது குறைகூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டிற்கு முன்னர் சர்வதேச அளவில் பொருளாதாரத் தடையை ஸ்ரீலங்கா மீது விதிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அந்த சூழ்நிலை 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் மாற்றமடைந்ததாக அமைச்சர் கூறினார். இந்த நிலையில் ஜெனீவா தீர்மானத்தில் தொழில்நுட்ப உதவிகளை மட்டுமே பெற்றுக் கொள்வதாகவும், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சில திருத்தங்களை செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் கூறிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, எந்தவொரு படையினரையோ அல்லது நபரையோ சர்வதேச நீதிபதிகளுக்கு முன்பாக கொண்டுசெல்ல இடமளிக்கப் போவதில்லை என்றும் சூளுரைத்தார்.