போர்க்குற்றச்சாட்டில் இருந்து பாதுகாக்கும் வசதிகளை கைவிடுகிறார் கோத்தா

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கக் கூடியதாக இருந்த போதும், அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முடிவெடுத்திருந்தார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

”அமெரிக்க படையினரை சட்டத்தின் முன் நிறுத்த முற்படும் அனைத்துலக அதிகாரிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

ஒரு அமெரிக்க குடிமகன் என்ற வகையில், கோத்தாபய ராஜபக்சவுக்கு போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து நல்ல பாதுகாப்புக் கிடைக்கும். ஆனால் அவர், அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டு, இந்த வசதிகளுக்கு விடை கொடுக்கவுள்ளார்.

அவர் அமெரிக்க குடியுரிமையை துறப்பதை முறியடிப்பதற்கு சில சக்திகள் அற்பமான முயற்சிகளை மேற்கொண்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா சென்று வரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக இப்போது திடீரென வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதானது, அதிபர் தேர்தலுடன் தொடர்புடையது” என்றும் அவர் தெரிவித்தார்.