போராட்டத்தை குழப்பும் முயற்சியே தம்மீதான தாக்குதல் –உறவுகள் தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி உறவுகள் போராட்டத்தை மேற்கொண்டுவரும் நிலையில் போராட்டத்தை குழப்பும் முயற்சியே தம்மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளனா்.

401 ஆவது நாளாக தமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் மேற்கொண்டு வரும் நிலையில் அங்கு சென்ற மர்ம நபரொருவர் நேற்றிரவு (12-04-2018) குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி கத்தியால் குத்த முயற்சித்துள்ளாா்.

இதனைத்தொடா்ந்து உறவுகள் மயிரிழையில் காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளனர்.

இந்நிலையில் தமது போராட்டத்தை குழப்பவே இந்த தாக்குதல் முயற்சி இடம்பெற்றதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தை குழப்பும் முயற்சியே தம்மீதான தாக்குதல் –உறவுகள் தெரிவிப்பு!

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் இன்றையதினம் எமது செய்திச்சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா் கருத்து தெரிவிக்கையில்…..

எங்கள் கொட்டிலை நோக்கி வந்து தண்ணிவாளியினை அடித்து நொருக்கிவிட்டு நேரடியாக வாசலினை தாண்டும்போது உள்ளே நானும் இன்னும் ஒரு தாயாரும் இருந்தோம்.

நான் உணவு அருந்திக்கொண்டிருந்தபோது மற்றைய தாயார் ஏன் வாறியள் என்று கேட்டபோது என்னத்திற்கு இதில் இருக்கின்றீர்கள், ஏன் இருக்கின்றீர்கள், உங்கள் போராட்டம் இனி நடத்த முடியாது என்று தெரிவித்த அந்த நபர் அதன் பின்னர் கெட்ட வார்த்தைகளால் பேசினாா்.

நான் ஏன் உள்ளுக்குள் வாறீர்கள் என்று கேட்கும் போதும் உள்நுழைந்த நபர் எனது முகத்தில் காறித்துப்பியுள்ளார்.

அதனை ஏன் என்று கேட்க முன்னர் சாப்பாட்டிலும் துப்பிவிட்டு எனக்கு அருகில் இருந்த தடி ஒன்றினை எடுத்துவிட குறித்த நபர் தனது மிதிவண்டியில் இருந்த பையில் இருந்த கத்தியினை எடுத்துகொண்டு வந்து எனக்கும் என்னுடன் இருந்த உறவுகளுக்கும் வெட்ட வந்துள்ளார்.

இந்நிலையில் நாங்கள் தப்புவதற்காக அவரை மிரட்டும் போது அவர் எங்கள் கொட்டிலில் இருந்த பானை,கதிரை,மற்றும் நாள் ஒட்டும் பதாதை என்பற்றின் மீது கத்தியால் வெட்டினாா்.

நாங்கள் கொட்டிலில் இருந்து வெளியேறி ஓடிவிட்டோம். பின்னர் அவர் எங்களை கலைத்துக்கொண்டு வந்தாா்.

இந்நிலையில் நாங்கள் அவர் கையில் வைத்திருந்த கத்தியினை பறித்ததுடன் அவர் கொண்டுந்த மிதிவண்டி மற்றும் பை என்பவற்றை பறித்தோம்.

இந்நிலையில் எங்கள் கொட்டிலில் இருந்த அம்மா ஒருவர் வீதி பாதுகாப்பில் இருந்த பொலீஸாரை உடனடியாக அழைத்து வந்ததையடுத்து அவரையும் அவர் வைத்திருந்த உடமைகளையும் பொலீஸார் கைதுசெய்து மீட்டுகொண்டு சென்றனா்.

இதில் அவர் மனநோயாளியா அல்லது மதுபோதையில் இருந்துள்ளாரா என்று தெரியவில்லை என பொலீஸார் தெரிவித்துள்ளனா்.

போராட்டத்தை குழப்பும் முயற்சியே தம்மீதான தாக்குதல் –உறவுகள் தெரிவிப்பு!

ஆனால் இவ்வாறு இருந்தவர் என்றால் எங்கள் போராட்டத்தை மையப்படுத்தி குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னணி என்ன என்ற சந்தேகம் எங்கள் மனங்களில் எழுந்துள்ளது.

காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவற்கான சதி நடவடிக்கையாக இதனை பார்க்கின்றோம்.

பலர் எங்கள் போராட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அதிலும் இவர் ஒரு நபராக இருக்கலாம்.

பொலீஸார்தான் இதனை தீவிரமாக விசாரணை செய்து அதன் பின்னணியினை உறுதிப்படுத்தவேண்டும் இவ்வாறானவர்கள் மிரட்டுவதால் நாங்கள் அச்சவுணர்வுடனே போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோரின் போராட்டத்தை மேற்கொள்ளும் எங்களையும் எங்கள் உறவுகளையும் பாதுகாக்கவேண்டியது இங்குள்ள பொலிசாரின் செயற்பாடாக அமையவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY