போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை இலங்கையிலும் அறிமுகப்படுத்த சிங்கப்பூர் இணக்கம்

போதைப்பொருள் ஒழிப்பிற்கு சிங்கப்பூர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கையிலும் அறிமுகப்படுத்த, சிங்கப்பூர் அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சிங்கப்பூர் அமைச்சர் டெஸ்மன் லீயுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று மெண்டரின் ஓரியன்டல் ஹோட்டலில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பிற்கு உதவுமாறு ஜனாதிபதியினால் குறித்த அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு, சிங்கப்பூர் தரப்பிலிருந்தும் இணக்கம் வெளியிடப்பட்டது.

அந்தவகையில் போதைப்பொருள் ஒழிப்பிற்காக இலங்கை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கு, சிங்கப்பூர் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆராய்வதற்காக, அந்நாட்டின் விசேட பிரதிநிதிகள் சிலர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

மேலும், சிங்கப்பூர் அரசாங்கம் போதைப்பொருள் சுற்றிவளைப்பு தொடர்பில் பின்பற்றுகின்ற நடைமுறைகள் குறித்தும் சட்டவிரோத போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பிற்காக அந்நாட்டின் அமைச்சுக்கள் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்திவரும் நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் இந்தச் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி இதன்போது ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார்.