பொறுப்பான அரசாங்கமென்றால் மக்களின் துயரை போக்க வேண்டும்- சஜித்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மக்களின் துயரை போக்க பொறுப்பான அரசாங்கமென்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது நாட்டில் வாழுகின்ற மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவி தேவைப்படுகின்றது.

அதாவது வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாத நிலையிலேயே பெரும்பாலான மக்கள் வாழுகின்றனர்.

இவர்கள் வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு தற்போது எந்ததொரு வழியும் இல்லை மற்றும் பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைமையில் உள்ளனர்.

பொருட்களின் விலை நன்றாக உயர்ந்து காணப்படுகின்றது. ஆடைதொழிற்சாலை உள்ளிட்ட பெரும்பாலான தொழில்நிலையங்களில் பணிப்புரிந்தவர்களுக்கு அதற்கான ஊதியம் கிடைக்கவில்லை.

நாட்டில் வறுமை மேலும் அதிகரித்துள்ளது. எனவே இத்தகைய சூழ்நிலையில் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

அத்துடன் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள மக்களை மீட்டு, அவர்களது வாழ்க்கையை பிரகாசமாக்க வேண்டும்.

மேலும் அநாவசிய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் அரச நிதியை மக்களின் துன்பத்தை போக்குவதற்கு பயன்படுத்த வேண்டும்.

அதாவது பொறுப்பான அரசாங்கம் என்றால், மக்களுக்கு உதவுவதற்கு, உரியவகையில் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.