பொது மக்களின் வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்

உங்களின் பெறுமதியான வாக்குகளை வீணடிக்காமல் நாட்டை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்துங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று (21) மாலை கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பேதத்தை மறந்து இந்த சந்தர்ப்பத்தில் தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் பயன்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் உட்பட அனைத்து மக்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் அதிகாரத்திற்கு வரும் பொதுஜன பெரமுன அரசாங்கம் மூலம் மக்களின் வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் போது ஏற்பட்ட வீட்டுத் திட்ட முறைகள் தோல்வியடைந்தமை தொடர்பில் பிரதமர் நினைவு கூர்ந்தார். புதிய வீட்டுத் திட்ட முறை தயாரிக்கும் போது வாழ்வதற்கு தகுந்த சூழலுடனான வீட்டுத் திட்ட முறை ஒன்றை தயாரிக்க வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவுடன், உடனடியாக அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் ஒரு வீடு என்ற கணக்கில் 14500 வீடுகளுக்கும் அதிக வீடுகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் கடந்த அரசாங்க காலப்பகுதியை போன்று போஸ்டர் மூலம் அநாவசிய செலவு செய்து பிரச்சார நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவில்லை.

தோட்ட மக்கள் வாழக் கூடிய தகுந்த வீடுகளை வழங்குவது, மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரதான எதிர்பார்ப்பாக இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தொண்டமான் தற்போது உயிரோடு இல்லை என்ற போதிலும் மக்களின் வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எங்கள் அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.