பொதுத்தேர்தல் இடம்பெற்று 2 மாதத்தில் மாகாண சபை தேர்தல்?

பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு இரண்டு மாத காலப்பகுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்டம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர், சட்டத்தரணி நிமல் சிறிபால டி சில்வா மகியங்கனையில் நேற்று (22) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்பொழுது மாகாண சபைகள் செயற்படவில்லை, மாகாண சபைகளுக்கு அமைச்சரவை இல்லை, மாகாண சபை பகுதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியாது பொதுமக்களுக்கும் இதன்மூலம் சேவையை முன்னெடுக்க முடியாதுள்ளது. நீதி அமைச்சர் என்ற ரீதியில் நான் மாகாண சபையை வலுப்படுத்தி மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான சட்டம் ஒன்றை அமைச்சரவைக்கு கொண்டுவர இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு அமைவாக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு 2 மாத காலப்பகுதியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்தால் மாத்திரமே மாகாண சபைகள் மூலமான சேவை இடம்பெறும்.

அதேபோன்று தொழில் வாய்ப்புக்களையும் வழங்க முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அபிவிருத்தி திட்டங்கள் நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.