பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கில்லை! – அமைச்சரவைப் பேச்சாளர்கள்

நாடாளுமன்றத்தில் எமக்கு ஏற்கனவே 113 க்கும் மேல் பெரும்பான்மை இருக்கின்றது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கில்லை. நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேணை கொண்டு வந்து தமக்கு ஆதரவு இருக்கிறதாக இல்லையா என்பதை ஐக்கிய தேசியக் கட்சிதான் நிரூபிக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர்களான கெஹலிய ரம்புக்வெல மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் தெரிவித்தனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டனர்.

கேள்வி : ரணில் விக்கிரமசிங்கவுக்கு 119க்கு மேல் பெரும்பான்மை இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி தரப்பு தெரிவித்துள்ளது. உங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா?

பதில் : எமக்கு ஏற்கனவே 113க்கும் மேல் பெரும்பான்மை இருக்கின்றது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கில்லை. காலையில் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரிமாளிகையில் இருக்கின்றவர்கள் மாலையில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்கின்றார்கள். பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேணை கொண்டு வந்து தமது ஆதரவு இருக்கின்றதாக இல்லையா என்பதை ஐக்கிய தேசியக் கட்சிதான் நிரூபிக்க வேண்டும்.