பெண்கள் யூரோ: அரையிறுதிப் போட்டிகளுக்கான அணிகள் தெரிவாகின

பெண்களுக்கான யூரோ என அழைக்கப்படும், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய பெண்கள் சம்பியன்ஷிப் கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, நெதர்லாந்து, இங்கிலாந்து, டென்மார்க், ஒஸ்திரியா ஆகிய அணிகள் தெரிவாகியுள்ளன.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில், சுவீடன் அணியைத் தோற்கடித்து, நெதர்லாந்து அணி, ஏற்கெனவே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த நிலையில், ஏனைய 3 காலிறுதிப் போட்டிகளும், நேற்று இடம்பெற்றன.

பிரான்ஸ் அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணிக்கான கோலை, ஜோடி டெய்லர், 60ஆவது நிமிடத்தில் பெற்றுக் கொடுத்தார்.

டென்மார்க் அணிக்கும் ஜேர்மனி அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில், டென்மார்க் அணி வெற்றிபெற்றது. இதற்கு முதல், 6 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஜேர்மனி அணிக்கெதிராக டென்மார்க் அணி பெற்ற இந்த வெற்றி, மிகப்பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

ஒஸ்திரியா அணிக்கும் ஸ்பெய்ன் அணிக்கும் இடையிலான போட்டி, மிகவும் விறுவிறுப்பானதாக அமைந்தது. போட்டியின் வழக்கமான நேரத்தில், இரண்டு அணிகளுமே கோல் எதனையும் பெற்றிருக்கவில்லை. இதனால், பெனால்டி முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதில் ஒஸ்திரிய அணி, 5-3 என்ற கணக்கில் வெற்றிபெற்று, அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றது.

இதன்படி, நெதர்லாந்து அணியும் இங்கிலாந்து அணியும் ஓர் அரையிறுதிப் போட்டியிலும், டென்மார்க் அணியும் ஒஸ்திரிய அணியும் மற்றைய அரையிறுதிப் போட்டியிலும் மோதவுள்ளன. இரண்டு போட்டிகளும், எதிர்வரும் வியாழக்கிழமை (3) இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY