பூரண மதுவிலக்கு கொண்டுவர கோரி கோட்டையை நோக்கி நாளை பேரணி : தமிழக பாஜ அறிவிப்பு

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று தமிழக பாஜ அறிவித்துள்ளது. தமிழக பாஜ தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பொதுமக்கள் ஓர் தீமையை எதிர்த்து கட்சி எல்லை கடந்து, கிராம எல்லை கடந்து, குடும்ப எல்லை கடந்து போராடுகிறார்கள் என்றால் அது டாஸ்மாக்கை எதிர்த்து தான். பல இடங்களில் மக்கள் விருப்பத்துக்கு எதிராக கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் உயிரை பணயம் வைத்து மதுவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாகவும், பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும். உடனே மக்கள் விருப்பத்திற்கு எதிரான மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை அனுப்புவதற்காக பெரும்பாலும் பெண்கள் பங்கெடுத்து கொள்ள கோட்டையை நோக்கி பாஜ சார்பில் நாளை (15ம் தேதி) காலை 10 மணிக்கு கோட்டையை நோக்கி பேரணி துவங்கும். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து தொடங்கும் பேரணிக்கு தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை வகிக்கிறார். தேசிய செயலாளர் எச்.ராஜா முன்னிலை வகிக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY