புலிகள் எவரும் எங்களிடம் சரணடையவில்லை: இலங்கை இராணுவம் திட்டவட்டம்

இறுதி யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளரால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே இந்த விடயம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் அதிகாரியான பிரிகேடியர் ஏ.எம்.எஸ்.பீ.அத்தபத்து என்பவரினால் குறித்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இறுதி யுத்தக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை. அவர்கள் இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளனர்.

மேலும் சரணடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அதிகாரங்கொண்ட நிறுவனமான புனர்வாழ்வு ஆணையாளர் காரியாலயத்திடம் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பாக இராணுவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறித்த விண்ணப்பத்திற்கு 3 மாதங்களின் பின்னரே சிங்கள மொழியில் பதில் கிடைத்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.