புலிகளைக் காட்டி இராணுவம் வடக்கில் தரித்துநிற்க பார்க்கிறது: சி.வி.

புலிகள் மீண்டும் வந்துவிட்டார்களென பொய்யாக வழக்குகளை புனைந்து பூச்சாண்டி காட்டி, வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்தும் தரித்துநிற்க பார்க்கிறார்கள் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயந்து ஒளிந்திருந்தவர்கள் இப்போது இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென கூறுவதாக இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அதற்கு, வாரம் ஒரு கேள்வி பகுதியில் பதில் வழங்கிய சி.வி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகேஸ் சேனாநாயக்க கூறுவதைப்போல தாம் பயந்து ஒளிந்தவர்கள் என்றால், 1983ல் மல்லாகத்தில் இராணுவம் செய்த அட்டகாசங்களால் ஏற்பட்ட மரணங்கள் பற்றிய மரண விசாரணைகளை வேறெவரும் செய்ய முன்வராதபோது தானே செய்ததாக சி.வி. குறிப்பிட்டார்.

அவ்வாறிருக்கையில் பயந்து ஒளியவேண்டிய காரணங்கள் எவையும் இருக்கவில்லை என்றும், இராணுவத்திற்கே மக்கள் பயந்து ஒளிந்தனர் என்றும் போரின் போது கண்மூடித்தனமாய் விடுத்த குண்டுவீச்சுக்களால் மக்கள் ஓடி ஒளிந்தனர் என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறு செய்துவிட்டு, திடீரென்று வந்து மக்கள் அபிமான வேலைகளைச் செய்வதால் இராணுவம் முற்றிலும் மாறிவிட்டது என்று அர்த்தமில்லையென சி.வி. கூறியுள்ளார்.

இராணுவத்தை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது பொம்மைகளையும் பொருட்களையும் கொடுத்தும், பொய்யாக வழக்குகளைப் புனைந்து புலிகள் வந்துவிட்டார்கள் என்று பூச்சாண்டி காட்டியும் தொடர்ச்சியாக தரித்து நிற்கப் பார்க்கின்றார்கள் என சி.வி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது மக்களுக்கு உதவிசெய்தமை அவர்களுடைய கடமையென்றும் அவ்வாறில்லாவிட்டால், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் போய் அரசாங்கம் கூறுவதற்கு ஒன்றும் இல்லையென்றும் சி.வி. சுட்டிக்காட்டியுள்ளார்.