புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கம் மீது பாய்கிறது பயங்கரவாத சட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்பாணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த சிவாஜிலிங்கத்தை வழிமறித்து பொலிஸார் வழங்கியுள்ளனர்.

அவருடன், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவா் கோ.கருணானந்தராசா மற்றும் நகரசபை உறுப்பினர் பொ.சிவஞானசுந்தரம் ஆகியோருக்கும் அழைப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையின் பிரகாரம் இம்மாதம் 31ஆம் திகதி சிவாஜிலிங்கம் உட்பட்ட மூவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் வல்வெட்டித்துறை தீருவிலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு சிவாஜிலிங்கம் முயற்சித்திருந்தார். எனினும் அப்போது பொலிஸார் அதனை தடுத்திருந்ததுடன், வழக்குப் பதிவு செய்வோம் எனவும் எச்சரித்திருந்தனர்.

இச்சம்பவம் இடம்பெற்று 4 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய ஒளிப்படம், பதாதைகள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதற்கான கேக் ஆகியன வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.