புயலால் உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு : தமிழக அரசுக்கு நோட்டீஸ்

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் இழப்பீடாக வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு வரும் 26ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னை, வாழை, மா, பப்பாளி, கரும்பு, முந்திரி, பலா, புளி, வெங்காயம், கத்திரி, தக்காளி உள்ளிட்ட ஏராளமான விவசாயம் முற்றிலும் நாசமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் ஒரு சில வாரங்களில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் புயலால் அழிந்துள்ளன.

நெல் விவசாயத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வு நிலைகுலைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உணவு, குடிநீர், பால், மருந்து பொருட்கள் கூட கிடைக்கவில்லை. பல இடங்களில் போக்குவரத்து பாதித்துள்ளது.

மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நெல், கரும்பு, வாழை, காய்கறி, பூக்கள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 13,500 மட்டுமே இழப்பீடாக வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

இது மிகவும் குறைவு.

சென்னை – சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு ஆர்ஜிதம் செய்யும் நிலங்களுக்கு அதிகளவில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு குறைந்தளவே இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் காப்பீட்டு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவாக இழப்பீடு நிர்ணயித்துள்ளனர். எனவே கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சத்துடன், அரசு வேலை வழங்க வேண்டும்.

காயமடைந்தோருக்கு ரூ. 10 லட்சம், தென்னை மரத்திற்கு ரூ. 50 ஆயிரம், நெல் ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம், படகுகளை இழந்த மீனவர்களுக்கு ரூ. 10 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று காலை நீதிபதிகள் கே. கே. சசிதரன் மற்றும் ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனு குறித்து வரும் 26ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையையும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.