புன்னகையே மருந்து… கேன்சரோடு போராடி, வெற்றி பெற்ற திரைப் பிரபலங்கள்…!

28-1446012166-gouthami6878நோய்க்கு பிரபலமானவர்கள், ஏழைகள், பணக்காரர்கள் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. திரையில் சிரித்து, அழுது நமக்கு பொழுதுபோக்கு காட்டும் நடிகர்கள், நோய்த் தாக்குதலுக்கு ஆளானதும் தங்கள் முகத்தை வெளியில் காட்ட பயந்து முடங்கி விடுவதில்லை.

நோயோடு போராடி வெற்றி பெற்று பின் மீண்டும் தங்களது வேலையைப் பார்க்க கிளம்பி விடுகின்றனர். அவ்வாறு புற்றுநோயோடு போராடி வெற்றி பெற்ற நான்கு திரையுலகப் பிரபலங்களின் வாழ்க்கையைக் குறித்து நியூஸ் மினிட் தொகுத்து வழங்கியுள்ளது.

கௌதமி: நமக்கு மிகவும் பரிச்சயமான நடிகை கௌதமிக்கும் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. 80களில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் கௌதமி.

மார்பகப் புற்றுநோய்… தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் நடித்த கௌதமிக்கு, அவரது 35வது வயதில் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பாபநாசம்… கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் கமலுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்துள்ளார் கௌதமி. இது தவிர அபிராமி என்ற சீரியலிலும் அவர் நடித்துள்ளார்.

விழிப்புணர்வு பிரச்சாரம்… மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் கௌதமியிடம் உள்ளதாம். இப்போது இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் அதனை நிஜமாக்குவாராம். அது தன் கடமை என்கிறார் கௌதமி.

ஜிஸ்னு ராகவன்: நம்மாள் என்ற மலையாளப் படம் மூலம் கடந்த 2002ம் ஆண்டு அறிமுகமானவர் ஜிஸ்னு ராகவன். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக ஜிஸ்னுவுக்கு புற்றுநோய் இருப்பது கடந்த 2012ம் ஆண்டு தெரிய வந்தது.

2 ஆண்டுப் போராட்டம்… அதனைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகிய ஜிஸ்னு, இரண்டாண்டுகளுக்குப் பின் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது நோய் குறித்து ரசிகர்களுக்குத் தெரிய படுத்தினார். அதோடு தற்போது தான் குணமாகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் புற்றுநோய்… ஆனால், புற்றுநோய் அவரை விடவில்லை. இந்தாண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் அவருக்கு புற்றுநோய்க் கட்டி இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது.

வாழ்க்கை அழகானது… ஆனால், தனது நோயின் வலியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாம் பிறந்த நாட்டிற்கு நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என பேஸ்புக்கில் கருத்துப் பதிவு செய்துள்ளார். அதோடு வாழ்க்கை அழகானது. ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்யுங்கள். சின்ன சின்ன விஷயங்களுக்காக கவலைப் படாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

யார் உங்கள் நண்பர்… மேலும், சிரிப்பு என்பது புற்றுநோய்க்கு மிகப்பெரிய எதிரி. சோகம், கோபம் தான் அவற்றின் நெருங்கிய நண்பர்கள். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் உங்களுடைய நண்பர் யார் என்று என ஜிஸ்னு தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மம்தா மோகன்தாஸ்: மம்தா மோகன்தாஸ். பாடகியும், நடிகையுமான மம்தா மோகன் தாஸ் தமிழில் விஷாலுடன் சிவப்பதிகாரம் படத்தில் நடித்தவர்.

மீண்டும் நடிப்பு… சினிமாவில் பிரபலமாகிக் கொண்டிருந்த போது, புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானார் மம்தா. ஆனால் போராடி அதில் இருந்து மீண்டு வந்து, தற்போது மீண்டும் சினிமாவில் நடக்கத் தொடங்கியிருக்கிறார்.

முதன்முறையாக பயம்… புற்றுநோய் உள்ளது எனத் தெரியவந்தபோது முதன்முறையாக வாழ்க்கையில் பயந்தாராம் மம்தா. மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவது எளிது. ஆனால், தனக்கென வரும் போது தான் உண்மையான பயம் வெளிப்படும் என அவர் கூறுகிறார்.

அமைதியான போராட்டம்… இது மனித இயல்பு தான் என்ற போதிலும், அதிலிருந்து போராடி மீண்டார் மம்தா. இதற்கிடையே மம்தாவின் திருமண வாழ்க்கையும் தோல்வியடைந்தது. ஆனால், வாழ்க்கையை அமைதியாக எதிர்கொள்ள புற்றுநோய் கற்றுக் கொடுத்ததாக அவர் கூறுகிறார்.

பெற்றோரின் ஆதரவு… தனது பெற்றோரின் ஆதரவே தான் நோயில் இருந்து மீண்டு வர மிகவும் உதவியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் மம்தா. ‘எதிர்மறையான எண்ணங்கள் எனக்குத் தோன்றும் போதெல்லாம் அவற்றை விரட்டியடித்து வாழ வேண்டும் என்ற நம்பிக்கையை எனக்கு என் பெற்றோர் அளித்தனர். எப்போதும் சிரிக்க மறக்காதே என்பது தான் அவர்கள் எனக்குக் கூறிய முதல் அறிவுரை’ என அவர் தெரிவித்துள்ளார்.

இன்னோசெண்ட்; மலையாளத்தில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் இன்னோசெண்ட். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் இவர் ஈடுபட்டு, எம்.பி.யாக இருக்கிறார்.

புன்னகையே மருந்து… புற்றுநோய் பாதிப்பு என தெரிந்தும் புன்னகை மாறா முகத்துடனே வலம் வந்தவர் இன்னோசெண்ட். அவரது இந்த மனநிலையே அவரை புற்றுநோயிலிருந்து மீட்டதாக டாக்டர்களே கூறுகின்றனர்.

சிரித்த முகத்துடன்… ‘புற்றுநோய் என்பதை லேசாக எடுத்துக் கொண்டேன். இதற்காக எந்த மூடநம்பிக்கைகளையும் நான் மேற்கொள்ளவில்லை. மாறாக எப்போதும் சிரித்த முகத்துடனே வலம் வந்தேன்’ என நம்பிக்கையுடன் அவர் கூறுகிறார்.

புற்றுநோய் வார்டுக்குள் சிரிப்பு… புற்றுநோயோடு தான் போராடிய நாட்களை, ‘புற்றுநோய் வார்டுக்குள் சிரிப்பு’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். மற்ற புற்றுநோய் நோயாளிகளுக்கு இந்நூல் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த பிறகே, அவர் எம்.பி. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY