புத்தளத்தில் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பொதுச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இரவு மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிஷாட்டின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

புத்தளத்தில் நீண்டகாலமாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத குறை தொடர்பாக, அங்குள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

அது தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கொழும்பில் இவ்விரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென்ற முடிவு எடுக்கப்பட்டதுடன், வேட்பாளர்கள் ஒதுக்கீடு தொடர்பாக இருதரப்பும் கலந்துபேசி முடிவெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இரண்டு கட்சித் தலைவர்களுடன் மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, மு.காவின் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.