புதிய வருடத்திலாவது சர்வதேசம் எமது உறவுகளை மீட்டுத்தருமா? -காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்

புதிய வருடத்திலாவது சர்வதேசம் தம்மீது கரிசனைக்கொண்டு எமது உறவுகளை மீட்டுத்தர வேண்டுமென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) 680 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் எமது உறவுகளை இந்த வருடத்திலாவது மீட்டுத்தருமாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேசத்திடம் கண்ணீர் மல்க கோரிக்கைவிடுக்கின்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர், “பல நாட்களாக நாம் எமது பிள்ளைகளை காண வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம்.

இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் அனைவருமே எம்மை கைவிட்டுவிட்டனர். நாம் தொடர்ச்சியாக சர்வதேசத்தினையே தற்போது எதிர்பார்த்து நிற்கின்றோம். எனவே புதிய ஆண்டிலாவது சர்வதேசம் எம்மீது கரிசனை கொண்டு எமது பிள்ளைகளை காண ஆவன செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் யுத்தத்திற்கு முன்னரும், யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு பின்னரும் இராணுவத்தினரால் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, தமிழர் தாயகப் பகுதிகளில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.