புதிய பயங்கரவாத ஒழிப்பு சட்ட மூலம்! மீண்டும் மீண்டும் சவாலாகும் மஹிந்த!

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப் போவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் தாம் ஆட்சிக்குவந்தவுடன் இந்த சட்டத்தை இரத்து செய்வதாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

கொழும்பிலிருந்து செயற்படுகின்ற தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஆசிரியர்களை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் காலை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த முறை இடம்பெற்ற முதலாவது சந்திப்பின் போதும் புதிய பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் தொடர்பான தனது கடுமையான எதிர்ப்பை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நடைபெற்ற இரண்டாவது சந்திப்பிலும் தனது முழுமையான எதிர்ப்பினை அவர் வெளியிட்டிருக்கின்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் புதிய பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை மிகவும் இரகசியமான முறையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து சமர்பிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

எனினும் இந்த சட்டத்தை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றினாலும், தாம் ஆட்சிக்கு வந்தவுடன் இதனை இரத்து செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை ஸ்ரீலங்காவில் தினமும் இடம்பெறுகின்ற மின்வெட்டு தொடர்பாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இதன்போது கருத்து வெளியிட்டார்.

அரசாங்கத்தின் முகாமைத்துவமானது சீர்குலைந்திருக்கின்ற காரணத்தினாலேயே நாட்டில் இவ்வாறு தொடர் மின்வெட்டு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.