புதிய அரசியலமைப்பு வெளிவரும்வரை முதலமைச்சர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது – சம்பந்தன் வலியுறுத்தல்!

புதிய அரசியலமைப்பு வெளிவரும்வரை வடமாகாண முதலமைச்சர் .சி.வி.விக்னேஸ்வரனுக்கெதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவேண்டாமெனவும், அதுவரை மென்போக்கைக் கடைப்பிடிக்குமாறு தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு இரா.சம்பந்தன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக வடமாகாணசபையில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப்போவதில்லையென தமிழரசுக் கட்சி எடுத்துள்ள நிலைப்பாட்டைக் கைவிடப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் உட்பட வடமாகாணசபை உறுப்பினர்களான அரியரத்தினம், சிவமோகன், சுகிர்தன் தவிர்ந்த அனைவரும் கலந்துகொண்டனர்.

வடமாகாணசபை நிலவரம் தொடர்பில் அனைவரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

இதன்போது உரையாற்றிய மாவை சேனாதிராஜா- தான் எவ்வளவோ பணிந்து நடந்தபோதும் முதலமைச்சர் அதை கணக்கெடுக்காமல், தன்னுடன் ஏறுக்குமாறாக நடப்பதாக குரல் உடைந்த நிலையில் கூறினார். அமைச்சர் சத்தியலிங்கத்தின் பதவிவிலகல் அவசரகதியிலானது என குறைபட்ட சிறிதரன், தலைமையுடன் கதைத்துவிட்டு அதை செய்திருக்கலாம் என்றார்.

தான் பதவி விலகிறது குறித்து சத்தியலிங்கம் தன்னிலை விளக்கம் அளித்தார். முதலமைச்சர் சட்டரீதியான விசாரணைக்குழுவை அமைத்தால் அதன்முன் தோன்ற தயாராக உள்ளதாகவும், சட்டரீதியற்ற விசாரணைக்குழுவின் முன் ஆஜராக முடியாதென்றும் கூறினார்.

எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட இரா.சம்பந்தன், புதிய அரசியலமைப்பு திருத்த பணிகள் நடந்துவரும் நிலையில் முதலமைச்சருக்கு எதிரான கடுமையான முடிவுகளை கைவிடுமாறு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். அதுவரை மென்போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென்றார். இதையடுத்து விரைவில் நடக்கவுள்ள கட்சி மத்தியகுழு கூட்டத்தில் இதுகுறித்த இறுதி முடிவை எடுப்பதாக கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

LEAVE A REPLY