புதிய அரசியலமைப்பு குறித்து மஹிந்த தரப்பு இனவாதத்தை பரப்புகிறது: மாவை சாடல்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் தேவையில்லாத இனவாதத்தை பரப்பி வருகின்றனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வடமராட்சியில் நேற்று(புதன் கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கான பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என கடந்த காலங்களில் கூச்சலிட்ட மஹிந்த ராஜபக்ஷ தரப்பும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும், தற்போது அரசியலமைப்பு நிபுணர் குழுவின் அறிக்கை வந்தவுடன் அதனை எதிர்ப்பதாகவும், நாட்டை பிளவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினை தீர்வு, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு போன்ற தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.