புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா

புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின்படி புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியாகவே அமையப் போகின்றது என முன்னாள் வட.மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“புதிய அரசியலமைப்பு தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு சபையில் பேசிய பேச்சின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியாகவே அமையப் போகின்றது எனத் தெளிவாகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் வரைபு தொடர்பாக என்னால் அறிக்கை வெளியிடப்பட்டது.

அப்புதிய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் சமஸ்டிக்கு முரணாக அமைந்துள்ளது. முழுமையாக தமிழ் அபிலாஷைகளை தீர்க்காது எனவும் சில திருத்தங்களுடன் தற்காலிகாக ஏற்பாடாக இதனை ஏற்கலாம் எனவும் கூறினேன்.

ஆனால் அப்புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசியலமைப்பு சபையில் ரணில் உரையாற்றும் போது, குறித்த இப்புதிய அரசியலமைப்பானது தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரிவு 2 மற்றும் 9 ஆகிய சரத்துக்களை பாதுகாத்தே கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இத்தகைய ரணில் விக்கிரமசிங்கவின் உரையின் அடிப்படையில் பார்க்கும் போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பானது ஓற்றையாட்சியாகவே அமையும் என்பது தெரிகின்றது” என சி.தவராசா மேலும் குறிப்பிட்டுள்ளார்.