புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்: பிரதமர் உறுதி

எவ்வித தடைகளுக்கும் அஞ்சி புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பையடுத்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் முயற்சியில் இருந்து அரசு பின்வாங்குகின்றது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தடைகளை தகர்த்து அனைவரது மனதையும் வெல்வோம் எனத் தெரிவித்த பிரதமர், தமது கொள்கையில் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்களை நாட்டிலுள்ள சகல தரப்பினருக்கும் நாம் தெளிவுபடுத்துவோம். சகல தரப்பினரினதும் மனதை வென்று புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தே தீருவோம்.

மூவின மக்களுக்கும் நாம் அளித்த வாக்குறுதிகளிருந்து பின்வாங்கமாட்டோம். அவர்களை நல்லிணக்கத்துடன் சமாதானமாக வாழ வைப்பதே எமது நோக்கம்.

பிளவுபடாத நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குவோம். நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சியில் நாம் ஒருபோதும் ஈடுபடமாட்டோம்.

சிறுபிள்ளைத்தனமாக அரசியல் நடத்துவோர் எம் மீது அர்த்தமற்ற – போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாட்டு மக்களுக்கு உண்மை நிலை புரியும்போது குழப்பவாதிகளும் திருந்தி நல்ல வழிக்கு வருவார்கள்” எனத் தெரிவித்தார்.