புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை இரண்டு கட்சிகளும் இழுத்தடிக்கின்றன – சம்பந்தன் குற்றச்சாட்டு!

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளான சிறிலங்காசுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன , இழுத்தடிப்புச் செய்கின்றன.

நாட்டிற்கு வருகை தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமையினால் ஏற்கனவே 50 வீதமான தமிழ் மக்கள் நாட்டைவிட்டுவெளியேறியுள்ளனர்.

இச்சந்திப்பில் காங்கிரஸ் உறுப்பினர்களான ரொட்னி பிரீலிங்குசன், ஹென்றி கியூலர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் மற்றும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன நாட்டின் நலனைக் கருத்திற்கொள்ளாது தமது அரசியல் எதிர்காலத்தை முன்வைத்து செயற்படுவதன் காரணத்தால், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் தேவையற்ற இழுத்தடிப்புகள் இடம்பெறுவதாக இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமையினால் ஏற்கனவே 50 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான தீர்வு ஒன்றினை எட்டமுடியாத சந்தர்ப்பத்தில், மேலும் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவார்கள் எனவும், அவ்வாறான நிலை ஏற்படக்கூடாது எனவும் எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமற்போனோர் விடயம் தொடர்பில் இனிமேலும் காலதாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

காணாமற்போனோர் அலுவலக சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இரா.சம்பந்தன், இந்த அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விசாரணைப் பொறிமுறைகளுக்கூடாக காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகள் கண்டறியப்பட்டு, அவர்களது உறவினர்களுக்கு தக்க ஆதாரங்களுடன் வௌிக்காட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை அமெரிக்க அரசாங்கமானது உறுதி செய்ய வேண்டும் எனவும் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்

LEAVE A REPLY