புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகாரத்தை தக்கவைக்க முயற்சி: திலும் அமுனுகம

அதிகாரத்தை பாதுகாத்து கொள்வதற்காகவே இந்த புதிய அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே திலும் அமுனுகம இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“புதிய அரசியலமைப்பானது மேற்கத்தைய நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்ட ஒன்றாகும்.

இதேவேளை அண்மையில் நாட்டின் அரசியலில் பெரும் சர்ச்சை தோற்றம் பெறுவதற்கு 19 ஆவது திருத்தச் சட்டமே முக்கிய காரணமாகும்.

இந்த 19 ஆவது திருத்தச் சட்டத்தில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியுமென ஒரு இடத்திலும் மற்றொரு இடத்தில் கலைக்க முடியாதெனவும் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, முழுமையான சீர்த்திருத்தமொன்றை சரியான முறையில் கொண்டுவர முடியாத அரசாங்கம், எவ்வாறு இந்த புதிய அரசியல் யாப்பை கொண்டுவர போகின்றது.

இதேவேளை கூட்டமைப்பு இப்புதிய அரசியலமைப்புக்கு தனது ஆதரவினை வழங்குவதற்கு முக்கிய காரணம், நாட்டை பிளவுப்படுத்துவதே ஆகும்” என திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.