புதிய அரசாங்கத்தின் வரிச் சலுகைகளினால் மக்கள் பயன்பெறவில்லை – விஜேபால!

புதிய அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகைகள் மூலம் பொதுமக்கள் தகுந்த சலுகைகளைப் பெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், பல்கலைக்கழக மாணவர்களுக்கு உயர் கல்விக்காக வழங்கப்படும் வங்கிக் கடன்களும் நிறுத்தப்பட்டுள்ளன என குற்றம் சாட்டினார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வழங்கப்பட்ட பல மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் நாட்டின் நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதாக பெரும்பான்மையான மக்கள் கூறுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

மேலும் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்த வாழ்க்கைச் செலவு, அரசியல் பழிவாங்கல் மற்றும் பணி இடமாற்றங்கள் குறித்து சிறப்பு ஒத்திவைப்பு விவாதம் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் என்றும் விவாதத்தின் போது, அரசாங்கத்தின் பதிலை பொதுமக்கள் அவதானிக்க முடியும் என்றும் விஜேபால ஹெட்டியாராச்சி கூறினார்.

இதேவேளை “கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கப்பட்டு எதிர்காலத்தில் ஒரு வலுவான அணியாக செயற்படும், இது தொடர்பாக கட்சித் தலைமைக்குள் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன, இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை, எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சி பிளவுபடாது” என விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.