பி.சி.ஸ்ரீராம் புகழாரம்

எரிமலை போன்ற திறமையாளர் சூர்யா என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புகழாரம் சூட்டியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் அனைவருமே எந்தவித சம்பளமும் இல்லாமல் பணிபுரிந்து வருகிறார்கள்.

காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம், சாந்தம் என நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த ஆந்தாலஜியை கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இதில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்புக்கு இடையே பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“கெளதம் மேனனுக்காகப் படப்பிடிப்பில் இருக்கிறேன். இணையத்துக்கான படம். புதிய வகையில் கதை சொல்லப்படுவதை அனுபவித்து வருகிறேன். நம் முன்னால் சூர்யா என்கிற எரிமலை போன்ற ஒரு திறமையாளர் இருக்கும்போது, நம்மை மயக்கும் அவரது நடிப்பைப் பார்க்கும்போது வேறென்ன வேண்டும்”.

இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

‘நவரசா’ ஆந்தாலஜியில் தனது பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா.