பிரேசில் ஜனாதிபதி தேர்தல்: முதற்சுற்றில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியின் வேட்பாளர் ஜயிர் பொல்சொனாரோ வெற்றிபெற்றுள்ளார்.

முதற்சுற்றில் பொல்சொனாரோ 46 வீத வாக்குகளையும் இடதுசாரி தொழிலாளர் கட்சி வேட்பாளர் பெர்ணான்டோ ஹதாத் 29 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

எனினும், வெற்றிபெறுவதற்கு 50 சதவீத வாக்குகள் அவசியம். இந்நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் இரு வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுமென கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரேசிலின் அடுத்த ஜனாதிபதி யாரென நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவே தெரியும் என்றும், இலத்திரனியல் வாக்குப்பதிவில் கோளாறு இல்லையென்றால் தான் வெற்றிபெற சாத்தியமுண்டு என்றும் பொல்சொனாரோ குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிரேசில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் எவ்வித பிரச்சினையும் இன்றி சுமூகமாக தேர்தல் இடம்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.