பிரிவினைவாதிகளுக்கு எதிராக செயற்பட திடசங்கற்பம் கொள்வோம்

சமூகங்களை இன மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராகவும் செயற்பட இந்த புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாகவது, மலர்ந்துள்ள இந்த புத்தாண்டானது இலங்கை வாழ் மக்களுக்கு செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

ஒரு புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ்வருடமானது இந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் கொண்டு வருகிற ஆண்டாக அமைய நான் பிரார்த்தனை செய்கிறேன்.

கடந்த வருடமாவது சாதகமான பாதகமான நிகழ்வுகளினூடாக பல்வேறு படிப்பினைகளை எமக்கு கொடுத்துள்ளது. இந்த படிப்பினைகளை எமது வாழ்வினை வளப்படுத்திக்கொள்ளவதற்கு பயனாக்கிக் கொள்ளும் அதேவேளை மற்றவர்களின் வாழ்விலும் நன்மையை கொண்டு வருமுகமாகவும் பயன்படுத்திக் கொள்வோமாக.

சமூகங்களிடையே பிரிவினையை கொண்டுவரும் பாதக காரணிகளுக்கு நாம் அகப்பட்டு போகாமல் அதேவேளை, சமூகங்களை இன மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராகவும் செயற்பட இந்த புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்வோமாக.

மேலும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் தமது நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இந்த புதிய வருடத்தில் அடைந்திட வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன்.

நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்க முடியாத பிளவுபடாத ஒருமித்த நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அடைந்திட முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரை அழைத்து நிற்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.