பிரபாகரன் இழந்த மனித உரிமை மாத்திரமே சர்வதேசத்திற்கு புலப்படுகிறது: ஜனாதிபதி

மனித உரிமை, ஜனநாயகம், சுதந்திரம் என்பன குறித்து பேசுபவர்களும், பிரதானமாக அரச சார்பற்ற நிறுவனங்களும் யுத்தகாலத்தில் பிரபாகரன் இழந்த மனித உரிமை குறித்து மாத்திரமே பேசுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை, மீகஹதென்ன பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கை பொலிஸ் படையினர் தங்கள் உயிரை தியாகம் செய்து பெரும் பங்காற்றியிருந்தனர்.

முப்பது ஆண்டுகால யுத்தத்தின்போது 1980 ஆண்டுகளின் நடுப்பகுதியில் 750இற்கும் அதிகமான பொலிஸார் ஒNரு இரவில் விடுதலை புலிகளினால் கொல்லப்பட்டனர்.

இன்று மனித உரிமை, ஜனநாயகம், சுதந்திரம் என்பன குறித்து பேசுபவர்களும், பிரதானமாக அரச சார்பற்ற நிறுவனங்களும் யுத்தகாலத்தில் பிரபாகரன் இழந்த மனித உரிமை குறித்து மாத்திரமே பேசுகின்றனர். மனித உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

சர்வதேசத்தின் ஊடாக வந்திருக்கும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு எமக்கு சேவை வழங்குவதற்காக வரவில்லை. கடல் கடந்த இன்னும் செயற்பாட்டில் இருக்கும் விடுதலை புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு சேவை செய்யவே இவை அமைக்கப்பட்டிருக்கின்றன” எனத் தெரிவித்தார்.