பிரபாகரனும் கட்டபொம்மனும் விடுதலையின் விலாசங்கள் -புகழேந்தி தங்கராஜ்!

விடுதலைப் போராட்ட வீரன் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கொச்சைப்படுத்துகிற அருவருப்பான மின்னஞ்சல் ஒன்று சென்ற வாரம் வந்திருக்கிறது எனக்கு! இப்போதுதான் அதைப் படிக்க நேரம் கிடைத்தது. அந்த வார்த்தைக் குப்பையைப் படிக்காமலேயே இருந்திருக்கலாம். படித்தபிறகு அதுகுறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை.

“எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா, நீ எனக்கு மாமனா மச்சானா – என்றெல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி நீட்டி முழக்கி வசனம் பேசிக் கொண்டிருந்தால், மறுநாளே தூக்கில் தொங்க வேண்டியதுதான்….” என்று நம்மை எச்சரிக்கிறது அந்த மின்னஞ்சல். வெறும் எச்சரிக்கையா அச்சுறுத்தலா என்பதை, அந்த மின்னஞ்சல் மூலம் தன்னெஞ்சறிய வஞ்சகம் செய்யும் வயசாளிகள் தான் விளக்க வேண்டும்.

2009ல், இருபத்தாறாவது மைலில் நடந்த ஒரு கொடூரமான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தும் துணிவற்ற ஒரு மனிதர் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். தனது நிஜமான எஜமானர்களின் உத்தரவுப்படி, அவர் மருத்துவமனையில் போய்ப் படுத்துக்கொண்டார். அவருக்கு முதுகுத்தண்டில் அறுவைசிகிச்சை என்று அறிவிக்கப்பட்டது. அந்த மனிதருக்கு முள்ளந்தண்டு என்று ஒன்று இருக்கிறது என்பது அந்த அறிவிப்பின் முலம் தெரியவர, ‘மெய்யாலுமா’ என்று ஒட்டுமொத்தத் தமிழினமும் வியப்பில் ஆழ்ந்துவிட்டது. அந்த வியப்பில், அறுவை சிகிச்சையெல்லாம் உண்மையா பொய்யா என்றுகூட யாரும் கவலைப்படவில்லை.

கட்டபொம்மனுக்கும் இதற்கும் தொடர்பிருப்பதால்தான் இதைக் குறிப்பிடுகிறேன்.

பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், பெண்டு பிள்ளைகளின் பாதுகாப்புக்காகவும், சொந்த இனம் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த முதல்வர் தான், தனது துரோகத்தை மூடிமறைக்க தமிழின் பெயரால் ஒரு கோமாளிக் கூத்தை கோவையில் அரங்கேற்றினார். செம்மொழி மாநாடு – என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

‘உலகம் முழுவதிலுமிருந்து தமிழர்கள் திரண்டுவந்து செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூசாமல் அழைத்தார், வார்த்தை ஜாலத்தில் வல்லவரான முதல்வர். ‘உலகம் முழுவதிலுமிருந்து தமிழர்கள் திரள்வது இருக்கட்டும்… முள்ளிவாய்க்காலில் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகளில் ஒரே ஒருவரையாவது உயிர்த்தெழச் செய்து இந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்தால் புண்ணியமாய்ப் போகும்’ என்று நாங்கள் முறையிட்டோம். மிகச் சிறந்த வசனகர்த்தாவான முதல்வரிடமிருந்து பதிலே வரவில்லை. அவரது வார்த்தைகள் மௌனித்துவிட்டன.

கோவை செம்மொழி மாநாட்டில் முதல்வரின் பேரப்பிள்ளைகளெல்லாம் ‘திடீர்’ கவிதாயிணிகளாகி நீட்டி முழக்கிக் கொண்டிருந்த சமயத்தில், கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே ஒரு துண்டுப் பிரசுரத்தை உணர்வோடும் துணிவோடும் விநியோகித்துக் கொண்டிருந்தனர்.

“எட்டப்பன் கருணாநிதியைக்
கட்டபொம்மனாகக் காட்டச்
செம்மொழி மாநாடா?”

என்கிற மூன்றே வரிகள்தான் அந்தத் துண்டறிக்கையில் இருந்தன. அந்த மூன்று வரிக் கேள்விக்காக, அந்த இளம்பிள்ளைகளைக் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்கியது. உண்மையைப் பேசினால் அடி உதைதான் மிச்சம் – என்பது, சென்னை உயர்நீதி மன்றத்தைப் போலவே கோவையிலும் நிரூபிக்கப்பட்டது.

அந்த இளம்பிள்ளைகள், தங்கள் பேனாவால் முதல்வருக்கு முதுகு சொரிந்திருந்தால், செம்மொழி மாநாட்டு மேடையில் ஏற்றப்பட்டிருக்கக் கூடும், கௌரவிக்கப்பட்டிருக்கவும் கூடும். எட்டப்பர்களுக்குத் தானே பொன்னாடை போர்த்தப்படுகிறது, பொற்கிழி வழங்கப்படுகிறது! அன்று அதையெல்லாம் அனுபவித்துவிட்டு, ‘ஈழ மெகா காவியம்’ எழுதப் போகிறோம் என்று இன்று அறிவித்து, அறிவுக் கொழுந்துகளான நம்மிடமிருந்து லைக்ஸ் அள்ளியிருக்க முடியாதா என்ன!

எட்டப்பன் என்கிற இழிபெயர் ஏந்தமாட்டோம், கட்டபொம்மனாகத்தான் இருப்போம் – என்கிற உண்மையைப் பேசினார்கள் அவர்கள். அந்த நேர்மையான நிலைப்பாடுதான் அவர்கள் பட்ட அடி உதைகளுக்கு அடிப்படையாக இருந்தது. எட்டப்பர்கள் கட்டபொம்மன் மாதிரி வேஷம் போடக் கூடும். கட்டபொம்மன்கள் எட்டப்பன் வேஷத்தைத் தாங்க முடியுமா?

கட்டபொம்மன் என்றால் தூக்கில் தொங்க வேண்டியதுதான் – என்பது சாபமில்லை… வரலாறு வழங்குகிற வரம். எட்டப்பனைப் போல, அடுத்தவர் கோவணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறவர்களுக்கு இதெல்லாம் புரியப் போவதில்லை.

கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது, 1979 அக்டோபர் 16ம் தேதி. அவனோடு துணிவும் தியாகமும் முடிந்துவிடவில்லை. 1801ல், கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக மருது சகோதரர்கள் கொடுமையான முறையில் தூக்கிலிடப்பட்டனர். ஊமைத்துரையும் தூக்கிலிடப்பட்டான். ஊமைத்துரையால் மீண்டும் எழுப்பப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைத் தகர்த்து, அதை வெறும் மணல் மேடாக மாற்றியபிறகுதான் ஓய்ந்தனர் ஆங்கிலேயர்.

மாவீரர் துயிலும் இல்லங்கள், தீர்வில் நினைவுச் சின்னம் உள்ளிட்ட அத்தனை அடையாளங்களும் ஈழ மண்ணில் எப்படித் தகர்க்கப்பட்டிருக்கிறதோ, அப்படித்தான் தகர்க்கப்பட்டிருக்க வேண்டும் – பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும்! கோட்டையைத் தகர்த்து முடித்தவுடன், விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டிப் புதைத்துவிட்டதாகத்தான் ஆங்கிலேயர்கள் நினைத்திருப்பார்கள். அது அவர்களது நம்பிக்கை. அவ்வளவுதான்!

நம்பிக்கையும் யதார்த்தமும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை மண்மேடாக்கியவர்கள், அந்த மணல் மேட்டின் கீழே கட்டபொம்மன், ஊமைத்துரை உள்ளிட்ட வீரிய விதைகள் விதைக்கப்பட்டிருந்ததை மறந்துவிட்டார்கள். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டிருக்கலாம், அவனது கனவுகள் உயிர்த்திருந்தன. அந்தக் கனவுதான் பலித்தது இறுதியில்! பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகள் மூட்டை முடிச்சோடு வெளியேற வேண்டியிருந்தது. மண்மேடாக ஆனது அவர்களது மனக்கோட்டைதான், பாஞ்சாலங்குறிச்சி இல்லை.

உலகின் எல்லா மூலையிலும் விடுதலைப் போர் வீரர்கள் நசுக்கப்பட்டிருக்கிறார்கள், ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், விடுதலை வேட்கையை எவராலும் நசுக்க முடிந்ததில்லை. சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்தபிறகும், வெற்றி இலக்கை எட்டாது போனதில்லை எந்த விடுதலைப் போராட்டமும்! அந்த விடுதலையின் அஸ்திவாரமாக இருந்தவர்கள் தான் கட்டபொம்மன்கள், ஊமைத்துரைகள், மருது பாண்டியர்கள். அவர்களை அழிக்கவும் முடியாது, அவர்களது சுதந்திரக் கனாவைப் பறிக்கவும் முடியாது.

கட்டபொம்மன் மாதிரி தூக்குல தான் தொங்கணும் – என்று வக்கிரத்துடன் சபிக்கிற வயசாளிகளைப் பார்த்து ஓரிரு கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. அடுத்தவர் குடிப்பிறப்பைப் பற்றியெல்லாம் எகத்தாளமாகக் கேள்வி கேட்க, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்கள் எழுத்தை மீண்டும் படிக்கும்போது உங்களுக்கே அருவருப்பாக இல்லையா? வயதால் பெரியவர் என்கிற ஒரே மரியாதையைக் கூட காப்பாற்றிக் கொள்ள மாட்டோம் என்று நீங்கள் அடம்பிடிப்பது அடாவடித்தனமா இல்லையா? எங்கேயாவது போய் வடக்கு பார்த்து உட்கார்வதை விட்டுவிட்டு, கிறுக்குப் பிடித்ததைப் போல் எழுதி என்ன கிழிக்கப் போகிறீர்கள்? கட்டபொம்மனின் தம்பியை ஆதரித்தால் நமக்கும் ஆபத்து வரலாம் என்பது தெரிந்தே அடைக்கலம் கொடுத்த மருதுபாண்டியர்கள் மனிதர்களென்றால், ‘தூக்குலதான் தொங்கணும்’ என்று கூசாமல் பேசுகிற நீங்கள் யார்?

ராஜதந்திரம் – என்கிற வார்த்தையின் தாத்பரியத்தை உணராமலேயே வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிற இந்த வயசாளிகளின் அடையாளம் கிடையாளமெல்லாம் எனக்குத் தெரியாது. மின்னஞ்சலில், அடா புடா என அடாவடித்தனமாக அவர்கள் எழுதுவதிலிருந்து, வயசாளிகள் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. அவர்கள் எட்டப்பர்களா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய எனக்கு நேரமில்லை. அப்படியே எட்டப்பர்களாக இருந்தாலும் அதற்காக நான் கவலைப்படப் போவதுமில்லை. எப்படி வாழ்வதென்று தீர்மானிப்பது அவர்களின் பிறப்புரிமை. நக்கிப் பிழைப்பதுதான் சாமர்த்தியமென்று அவர்கள் முடிவெடுத்தால், அதில் நாம் எப்படித் தலையிட முடியும்?

பேச்சுக் கச்சேரி முக்கியமில்லை, செயற்பாடுதான் முக்கியம் – என்பது பிரபாகரனின் கொள்கை மட்டுமில்லை. அகிம்சை வழியில் போராடிய காந்திஜிக்கும், ஆயுதப் போராட்டம் நடத்திய கட்டபொம்மனுக்கும் கூட அதுதான் கொள்கையாக இருந்தது.

மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா – என்பதெல்லாம் கட்டபொம்மன் பேசிய வசனமில்லை! ஒரு திரைப்பட வெற்றிக்காக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பேசிய வசனம். கட்டபொம்மனின் வரலாற்றில் கைத்தட்ட வைக்கும் வசனங்கள் இருப்பதாகத் தெரியவில்லை…. வியக்க வைக்கிற விஷயங்கள் தான் இருக்கின்றன.

‘ஆங்கிலேய கும்பெனிப் படைக்குத் துணி துவைத்துக் கொடுக்காதீர்கள்’ என்று சலவைத் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததில் தொடங்கி, ‘கும்பெனிப் படை முகாமுக்கு ஆட்டிறைச்சி சப்ளை செய்யாதீர்கள்’ என்று ஆடு வெட்டுபவர்களுக்கு உத்தரவிட்டது வரை, கட்டபொம்மனின் ஒவ்வொரு நடவடிக்கையும், மானமுள்ள ஒரு விடுதலை வீரனின் விலாசமாகவே இருக்கிறது இன்றுவரை! ராமலிங்க விலாசம் அதன் உச்சக்கட்டம்.

ராமநாதபுரம் அரண்மனையிலிருக்கும் ராமலிங்க விலாசத்தில் தான் ஜாக்சன் துரையைச் சந்திக்கிறான் கட்டபொம்மன். தன்னை நயவஞ்சகமாகக் கைது செய்ய முயலும் ஜாக்சனை, கட்டபொம்மனின் துணிவும் வீரமும் சமயோசிதமும் முறியடிக்கின்றன. அப்படியொரு இக்கட்டான நிலையில், ‘நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ’ என்றெல்லாம் நீட்டி முழக்கி கட்டபொம்மன் பேசியிருக்கமாட்டான் என்றே நினைக்கிறேன். குக்கல் கிக்கல் என்றெல்லாம் மற்றவர்களை நக்கலடிப்பதிலேயே பரிபூரண ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் மகாபெரியவர்களுக்கு இதை எடுத்துச் சொல்ல வேண்டியது எனது கடமையாகிறது.

என்னுடைய எழுத்து, திரைப்படம் இரண்டுக்கும், ஒரே ஒரு இலக்குதான் இருக்கிறது இன்றுவரை! அந்தத் தகுதியுடன்தான் இதை எழுதுகிறேன். யாராவது எதையாவது பேசிவிட்டுப் போகட்டும், நமக்கெதற்கு வம்பு – என்று என்பாட்டுக்குப் போக என்னால் முடியவில்லை. அதனால்தான் இதை எழுதுகிறேன். என்னுடைய ‘கடல் குதிரைகள்’ திரைப்பட வெளியீட்டு வேலைகளுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படுவதால் பத்திரிகைகளில் எழுதுவதையே நிறுத்தி வைத்திருக்கும் என்னால் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை.

வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய ஒரு நம்பகமான நீதிப் பொறிமுறையை அமைக்கச் சம்மதிப்பதாக ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதியை, கொழும்பு திரும்பியதும் சாக்கடையில் வீசியது இலங்கை.

கலப்பு நீதிமன்றங்கள் மூலம்தான் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்ட முடியும் – என்கிற ஜெனிவா கருத்தியலையே உல்டா செய்து, ‘கலப்புத் திருமணங்கள் மூலம்தான் நல்லிணக்கமும் சமாதானமும் சாத்தியம்’ – என்று பொறுக்கித்தனமாக ஒலிக்கிறது ஒரு குரல். இந்தக் குரலை ஏற்கெனவே கேட்டிருக்கிறோமே என்று யோசித்துப் பார்க்கும்போதுதான், ‘கலப்பினமே இனப் பிரச்சினைக்குத் தீர்வு’ என்று மகிந்த மிருகம் போதித்தது நினைவுக்கு வருகிறது. நாட்டை வழிநடத்துகிறார்களா, மாட்டுப் பண்ணை நடத்துகிறார்களா என்பதையே விளங்கிக்கொள்ள முடியாத நிலை. இதைப்பற்றியெல்லாம் எழுதிக் கிழிக்க முன்வராதவர்கள், கட்டபொம்மன் முகத்தில் கரிபூசுவதற்கு மட்டும் முண்டியடித்துக்கொண்டு முன்வருகிறார்களே…. ஏன்?

விக்னேஸ்வரன் என்கிற மனிதருக்கு சர்வதேச அளவில் நெருக்கடி தரப்படுகிறது. சமந்தாவிலிருந்து சுஷ்மா வரை அத்தனைப் பேரும், நீதியின் வேரில் வெந்நீர் ஊற்றும் தங்கள் முயற்சிக்குத் துணைநிற்க அழைக்கிறார்கள் அவரை! அசைந்து கொடுக்க மறுக்கிறார் அந்த மனிதர். ‘நடந்த அநீதிக்கு நீதி கிடைக்காமல், நல்லிணக்கம் எப்படி சாத்தியம்’ என்று நேர்மையுடன் கேட்கிறார். அந்தக் கேள்விக்கு இன்றுவரை எந்த சர்வதேச சக்தியாலும் பதில் சொல்ல முடியவில்லை.

‘கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்த மறுக்கும் உனக்கு கலப்பு மணம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது’ என்பதை நாகரிகமான வார்த்தைகளில் நாசுக்காகக் கேட்டிருப்பது கூட விக்னேஸ்வரன் மட்டும்தான்! இந்த உறுதியும் நேர்மையும் அவரிடமிருந்து மற்றவர்களையும் தொற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் நான்.

நடக்கிற கதையா இதெல்லாம்…..
போகாத ஊருக்கு வழிகாட்டாதீர்கள்…
என்றெல்லாம் விக்னேஸ்வரனுக்கே போதிக்கிற போதிசத்துவர்கள் பலர். அவர்கள், சிங்களச் சகோதரி சந்தியா எக்னலிகோடவிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

தமிழினத்தை அழித்து ஒழிக்க, ராஜபக்ச அரசு ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதை அம்பலப்படுத்தியவர், சந்தியாவின் கணவர் பிரகீத் எக்னலிகோட. இனப்படுகொலை – என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களில் முக்கியமானது அது. அதற்காகத்தான் அவரைக் குறிவைத்தது கோதபாய கும்பல். 2010 முதல் பிரகீத்தைக் காணவில்லை. காணாதுபோன கணவனுக்காக, அச்சுறுத்தல்கள் குறித்தெல்லாம் கவலைப்படாமல், கடந்த 6 ஆண்டுகளாக சந்தியா நடத்தி வருகிற உறுதியான போராட்டத்தால்தான், பிரகீத் குறித்த மர்ம முடிச்சு மெல்ல மெல்ல அவிழ்ந்துகொண்டிருக்கிறது.

இனப்படுகொலை என்பதையெல்லாம் நிரூபிக்க முடியாது…
அதற்கெல்லாம் நியாயம் கேட்க முடியாது…
அதையே கட்டிக்கொண்டு அழாதீர்கள்…
என்று போதிப்பதன் மூலம் இனப்படுகொலைக் குற்றவாளிகளை மடியில் அமர்த்தி மஞ்சள் பூச முயல்பவர்கள், சந்தியா வந்தனம் செய்வது நல்லது. அதைவிட்டுவிட்டு, ‘நடுரோட்டில் நின்று வாய்கிழியக் கத்தி என்ன சாதித்திருக்கிறோம்’ என்று தன்னிரக்கத்துடன் புலம்புவது அர்த்தமற்றது.

மத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடி – என்பதைப்போல், ஈவிரக்கமற்ற முறையில் இனப்படுகொலையைச் செய்து முடித்த இலங்கைக்கு, இப்போது இரட்டைத் தலைவலி. தனிப்பட்ட ஆதாயம் எதையும் எதிர்பார்க்காமல் புலம்பெயர் நாடுகளில் வீதியில் இறங்கி நீதி கேட்கிற நம் உறவுகள் ஒருபுறம்….! கூட இருந்தே குழிபறிப்போர் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தாயகத்திலிருந்து நீதிகேட்கும் விக்னேஸ்வரன் போன்றவர்கள் இன்னொருபுறம்.

புலத்திலிருந்தும் தாயகத்திலிருந்தும் நீதிகேட்டுப் போராடுகிற இந்தப் போராளிகளின் தொடர் முயற்சிக்கு என்ன பயன் – என்று கேட்கிற கோயபல்ஸுகளைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. இனப்படுகொலை முடிந்த சில தினங்களிலேயே, ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இலங்கையைப் பாராட்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது இந்த மேதாவிகளுக்கு நினைவிருக்கிறதா? அதே மனித உரிமைகள் பேரவையில் அடுத்த ஆண்டு, அதற்கு அடுத்த ஆண்டு – என்று ஆண்டுக்கு ஆண்டு சூழ்நிலை மாறிக்கொண்டே வந்ததற்கு, புலம்பெயர் உறவுகளின் அறிவும் உணர்வும் மிக்க அணுகுமுறைகளும் போராட்டங்களுமே அடிப்படை என்பதை இவர்கள் உணரவேயில்லையா! அல்லது, அதெல்லாம் அமெரிக்கா போட்ட பிச்சை – என்று பிரகடனம் செய்து, இந்த இனத்தைக் கொச்சைப்படுத்தப் போகிறார்களா?

லண்டன் நகரில் நடுத்தெருவில் நின்று எமது உறவுகள் போராடிய காட்சி மாறியிருப்பதைக் கவனிக்கிறார்களா இவர்கள்! இன்றைக்கு அதே லண்டன் நகரில், ‘எங்கள் ராணுவத்தைக் காப்பாற்று’ ‘சர்வதேச விசாரணையைத் திணிக்காதே’ என்று சிங்கள மக்கள் நடுத்தெருவில் நிற்பதற்கு எது அடிப்படை? ‘ராணுவ வீரர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தாதே’ என்று 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குவதற்காக கொழும்பு நகரின் நடுவீதியில் கோதபாயவும் மகிந்தனும் நின்று கொண்டிருக்கிறார்களே… எதனால்? இது, கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதிகேட்டுப் போராடிய, போராடுகிற, ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கிற வெற்றி. ‘இனப்படுகொலை என்றெல்லாம் பேசாதீர்கள்’ என்று போதித்தவர்கள், சூடு சுரணையிருந்தால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கட்டும்! அல்லது வழக்கமான ‘உறுதி’யுடன், “நாங்க எப்ப அப்படிச் சொன்னோம்” என்று சொல்லி, உமிழ்ந்த எச்சிலை உறிஞ்சியெடுக்கட்டும்!

மைத்திரிதான் மகிந்தன், மகிந்தன் தான் மைத்திரி – என்பதை உணராமல் உளறியவர்களுக்கு, ‘போர்க்குற்ற விசாரணையிலிருந்து மகிந்த ராஜபக்ச என்னால்தான் தப்பிக்க முடிந்தது’ என்று மீண்டும் மீண்டும் மைத்திரி ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதைப் பார்த்த பிறகாவது உண்மை விளங்குகிறதா இல்லையா? கதாநாயகனே இல்லாமல் நடக்கிற கொழும்பு நாடகத்தில், வில்லன் எவன், விதூஷகன் எவன், கூட இருந்தே கழுத்தறுப்பவன் எவன் – என்பதெல்லாம் இப்போதாவது புரிகிறதா?

கட்டபொம்மன் போல இனத்தின் விடுதலைக்காக உயிரையும் இழக்கத் தயாராக இருந்த பிரபாகரனையும் பிரபாகரனின் தோழர்களையும், சிங்கள இனவெறியர்களுடன் சேர்ந்து இழிவுபடுத்தி மகிழ்ந்தவர்களிடம் கேட்க இன்னொரு கேள்வி இருக்கிறது. பிரபாவைத் தூற்றிய பௌத்த சிங்களப் பொறுக்கிகள், செல்வா என்கிற ஈடு இணையற்ற தலைவனின் மீது மானாவாரியாகச் சேறு பூசத் தொடங்கியிருப்பதைக் கவனிக்கிறீர்களா இல்லையா? அதற்குக்கூட பதில் சொல்லாமல் கட்டபொம்மன் மீது பாய்கிறீர்களே, அதனால்தான் கேட்கிறேன் இதை!

தங்களது மனவக்கிரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவே மின்னஞ்சல் அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கும் வயசாளிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இனப்படுகொலை – என்பது மகிந்த அல்லது கோதபாய மூளையில் உதித்த திட்டமில்லை. அது, ஆண்டாண்டுக் காலமாக சிங்கள இனம் அரங்கேற்றிவருகிற அராஜகம். கோதபாயவும் மகிந்தனும் பொன்சேகாவும் மட்டும் குற்றவாளிகள் இல்லை…..! பௌத்த சிங்கள இலங்கை தான் பிரதான குற்றவாளி. இனவெறிபிடித்த அந்த நாடுதான், மன்னிக்கவே கூடாத முதல் முக்கியக் குற்றவாளி!

கூச்சநாச்சமின்றி, நமோ நமோ மாதா – பாடும் எவரும் ஒரு குற்றவாளியைக் கூத்தியாராக வைத்திருக்கும்படி எமக்குப் போதிக்கும் வாத்தியார் வேலையில் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்ளக் கூடாது!

LEAVE A REPLY