பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் துணை முதல்-அமைச்சர் ஓ பன்னீர் செல்வம்

கடந்த 6-ந்தேதி தேர்தல் ஆணையத்தில் நடந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச அனுமதி கேட்டார்.

ஆனால் அன்றைய தினம் டெல்லியில் பிரதமர் மோடிக்கு பல்வேறு தொடர் பணிகள் இருந்ததால் அவருக்கு சந்திப்புக்கான அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அன்று பிரதமர் மோடியை சந்திக்க முடியா மல் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் தன்னை சந்திக்க அனுமதி கேட்டது பற்றி பிரதமர் மோடிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் வியாழக்கிழமை சந்தித்துப் பேச ஓ.பி.எஸ்.சுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.

இந்த தகவலை நேற்று காலை ஓ.பன்னீர்செல்வத்திடம் பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்றிரவு 7.45 மணிக்கு அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் சென்றனர்.

இன்று (வியாழக்கிழமை) பகல் 11 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் அலுவலகத்துக்குப் புறப்பட்டு சென்றார். 11.30 மணிக்கு பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது மோடியிடம் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம், தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஓ.பன்னீர் செல்வம் விரிவாக பேசியதாக தெரிய வந்துள்ளது.

துணை முதலவராக பொறுப்பேற்ற பிறகு ஓ.பன்னீர் செல்வம் பிரதமரை சந்தித்து பேசினார்.

LEAVE A REPLY