பிரதமரை சந்திக்க தேதி வாங்கி தருவதாக எங்களிடம் கவர்னர் உறுதி அளித்துள்ளார் -மு.க.ஸ்டாலின் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. தி.மு.க. மற்றும் அதன் ஆதரவு கட்சிகள், வியா பாரிகள், விவசாயிகள் சார்பில் கடந்த 5-ந்தேதி முழு அடைப்புப் போராட் டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தி.மு.க. ஆதரவு கட்சிகளின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பயணம் இரு வழித்தடங்களில் நடத்தப்பட்டது

இன்று காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தி.மு.க.வும், தோழமை கட்சிகளும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தின.

இதில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ் ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திரா விடர் கழக தலைவர் கி. வீரமணி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அனைவரும் காரில் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு கவர்னர் பன்வாரி லால் புரோகித்தை மதியம் 12 -30 மணியளவில் சந்தித்து பேசினார்கள்.
காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். கவர்னரை சந்தித்து மனு கொடுத்து விட்டு வந்த பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் மத்திய அரசு அதை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

மத்திய அரசின் போக்கால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. இது பற்றி நாங்கள் இன்று கவர்னரிடம் தெளிவாக எடுத்து கூறினோம்.

மே மாதம் 3-ந்தேதிக்குள் காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதுவரை மத்திய அரசு காத்திருக்கக்கூடாது. அதற்கு முன்னதாக வரைவு திட்டத்தை உருவாக்கி தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்காக பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்கள் சார்பில் கவர்னரிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கு கவர்னர் ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக தமிழ்நாட்டில் இருந்து விவசாயி பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை.

இது தொடர்பாக எந்த கடிதமும் மத்திய அரசுக்கு வரவில்லை என்று பொன். ராதாகிருஷ்ணனே கூறி விட்டார். இதுநாள் வரை பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேச முடியவில்லை.

எனவே பிரதமரை சந்திக்க நீங்கள் (கவர்னர்) ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். கவர்னரும் பிரதமரை சந்திப்பதற்கு தேதி வாங்கி தருவதாக எங்களிடம் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்படாத அரசு உள்ளது. இது பற்றியும் கவர்னரிடம் எடுத்து கூறினோம். மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் கவர்னரிடம் கேட்டுக் கொண்டோம்.

இன்னும் 2, 3 நாட்களில் மீண்டும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூடி பேச உள்ளோம். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இது நாடகமாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

LEAVE A REPLY