பிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிலா கோனவலவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க தமது குடும்ப நிறுவனமான லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ் மற்றும் பப்ளிஷர்ஸ் தனியார் நிறுவனத்தின் பிரதான பங்குதாரர் என்பதுடன், அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட இலாபத்தைக் கருத்திற்கொண்டு சில அரச நிறுவனங்களுடன் அவர் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பிற்கமைய நாடாளுமன்ற உறுப்பினரொருவர் அரசாங்கத்துடன் வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது என சுட்டிக்காட்டி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.