பிணைமுறி விவகாரம்; நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு கோரிக்கை!

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விவாதிப்பதற்காக, நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியன, கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பில் நேற்று (04) நடத்தப்பம்ம ஒன்றிணைந்த எதிரணியின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய, அவ்வெதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, நிதி விவகாரம் தொடர்பில் புதிய சட்டங்களை அமுல்படுத்தவேண்டிய தேவை உள்ளதால், நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்ட வேண்டுமெனக் கூறினார்.

மேலும், கொழும்பில் நேற்று ஊடகச் சந்திப்பொன்றை நடத்திய மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், “ஃபுட்நோட் குழுவினர், பிணைமுறி கொடுக்கல் வாங்கலை நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாலும், இன்று அனைத்துத் தகவல்களும் வெளியாகிவிட்டன. அதனால், அவர்கள் குறித்த சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டவேண்டும்” என்றார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, நேற்றுக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
“பிணைமுறி கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றங்களை, ஜனாதிபதி, தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார். தவறான கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக, பாரியளவு அரச நிதி, மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால், அரச நிறுவனங்க​ளுக்கே பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.

“இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் 148ஆவது உறுப்புரையின் கீழ், அரச நிதி தொடர்பான பொறுப்பு, நாடாளுமன்றத்துக்கே உரித்தாகவுள்ளது. அத்துடன், மத்திய வங்கியின் நிதிக் கட்டுப்பாட்டுக்கும் இழந்துள்ள நிதியை மீளப் பெற்றுக்கொள்வதற்கும், சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களைக் கொண்டுவருதல் முக்கியமாகியுள்ளது.

“அத்துடன், ஆணைக்குழுவின் அறிக்கையை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள், உடனடியாக முன்னெடுக்கப்படல் வேண்டும்.

“எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதியே, நாடாளுமன்றம் கூடவுள்ளது. இருப்பினும், தற்போது எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதனால், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என, அநுர குமார திசாநாயக்க, தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY