பிகாரில் இன்று 3-ம் கட்டத் தேர்தல்: லாலு மகன்கள் உள்பட 808 பேர் போட்டி

imagesபிகார் சட்டப்பேரவைக்கு 3ஆவது கட்டமாக 50 தொகுதிகளுக்கு புதன்கிழமை (அக்.28) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாதின் மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்பட 808 பேர் போட்டியிடுகின்றனர்.


பிகார் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 81 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்ட நிலையில், பாட்னா, வைஷாலி, சரண், நாளந்தா, பக்ஸார், போஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 தொகுதிகளுக்கு புதன்கிழமை 3ஆவது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட 808 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில், 71 பேர் பெண்கள். தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை 1.45 கோடி பேர் பெற்றுள்ளனர்.
தேர்தலையொட்டி 14,170 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 6,747 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 1,909 வாக்குச்சாவடிகள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைந்துள்ளன. வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அனைத்துச் சாவடிகளிலும், மாநில போலீஸாருடன் இணைந்து மத்திய துணை ராணுவப் படையினர் 1,107 படைப்பிரிவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இடங்களைச் சுற்றியிருக்கும் ஆறுகளில் ரோந்துப் பணியில் 47 மோட்டார் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளை ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து, வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலஸ், 716 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ், பாஜக மூத்த தலைவர் நந்த் கிஷோர் யாதவ் (பாட்னா சாஹிப் தொகுதி), அமைச்சர்கள் ஷியாம் ரஜக் (புல்வாரி), சிராவண் குமார் ( நாளந்தா), சட்டப்பேரவை துணைத் தலைவர் அமரேந்திர பிரதாப் சிங் (அரா), பாஜக சட்டப்பேரவை கொறடா அருண்குமார் சின்ஹா (கும்ரர்) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.
நவம்பர் 1இல் 4ஆவது கட்டத் தேர்தல்: 4ஆவது கட்டத் தேர்தல், நவம்பர் மாதம் 1ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, 5ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து, 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.

LEAVE A REPLY